தாராபுரத்தில் விஜய்யின் உருவச்சிலையை வைத்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் சத்தியபாமா! களநிலவரத்தால் மாறிய பிரச்சார யுத்தி!
TVK candidate Sathyabama canvasses for votes in Dharapuram using a statue of Vijay campaign strategy shifts due to ground realities
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா, முதலமைச்சர் விஜய்யின் உருவச்சிலையை தனது பிரச்சார வாகனத்தில் வைத்து வாக்கு சேகரித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் ஐந்து முனைப் போட்டி நிலவும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் தாராபுரம் தொகுதியில் தவெகவுக்கு தேர்தல் களம் சவாலானதாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சத்தியபாமாவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, இடைத்தேர்தலில் இருவரையும் தவெக வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்து இருவருக்கும் எதிராக தொகுதி மக்களிடையே அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தாராபுரத்தில் சத்தியபாமா பிரச்சாரம் மேற்கொண்ட சில பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சில இடங்களில் அவரை பிரச்சாரத்துக்கு வரவிடாமல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் சத்தியபாமா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் முதலமைச்சர் விஜய்யின் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவச்சிலையுடன் அவர் வாக்கு சேகரித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தாராபுரம் தொகுதியில் அதிமுகவுக்கு வலுவான ஆதரவு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில், சத்தியபாமா ஏற்கெனவே அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தாலும், அவர் தற்போது வேறு கட்சியின் சார்பில் போட்டியிடுவதால் தேர்தல் முடிவு குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. விஜய் நேரடியாக தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அவரது உருவச்சிலையை வைத்து சத்தியபாமா வாக்கு சேகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் தவெக வேட்பாளர்கள் சிலர் விஜய்யின் உருவம் மற்றும் தொழில்நுட்ப காட்சிகளைப் பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். அந்த வகையில் கும்பகோணம் தொகுதி தவெக வேட்பாளர் வினோத் ரவி விஜய்யின் 3டி ஹாலோகிராம் காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாகவும், கொளத்தூர் தொகுதி வேட்பாளர் வி.எஸ். பாபு விஜய்யின் உருவச்சிலையை வைத்து பிரச்சாரம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், தாராபுரத்தில் விஜய்யின் உருவச்சிலையை வைத்து சத்தியபாமா மேற்கொண்டுள்ள பிரச்சாரம் எந்த அளவுக்கு தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவு மற்றும் அதன் பின்னர் வெளியாகும் முடிவுகளில்தான் தெரியவரும்.
English Summary
TVK candidate Sathyabama canvasses for votes in Dharapuram using a statue of Vijay campaign strategy shifts due to ground realities