பகீர்! முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...3 பேருக்குக் கத்திக்குத்து....! - 5 பேர் கைது! என்ன நடந்தது?
violent act committed due previous enmity 3 people stabbed 5 people arrested What happened
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பவானி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் அரி பிரசாத் மற்றும் தீபக்கிற்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் பெஞ்சமின், அஜித்குமார், சிவகுமார், ஜான்சன், பிரசாந்த் ஆகியோருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் பகை நிலவி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதல் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே விரோதம் தீவிரமடைந்த நிலையில், நேற்று முன்தினம் உள்ளூர் ஜூஸ் கடையில் மீண்டும் வாக்குவாதம் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சாதாரண தகராறாக தொடங்கிய அந்த சம்பவம், நள்ளிரவில் ரத்தம் சிந்திய தாக்குதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, இரவு சுமார் 11 மணியளவில் பிரவீன் பெஞ்சமின் தலைமையிலான 5 பேர், அரி பிரசாத்தை தேடி அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். அப்போது வீட்டின் வாசலில் அரி பிரசாத்தின் தாயார் பழனியம்மாள் மற்றும் உறவினர்களான வினோத்குமார் (34), கோதண்டபாணி (48) ஆகியோர் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்களிடம் “அரி பிரசாத் எங்கே?” என்று கேட்டு ஆவேசமாக தகராறில் ஈடுபட்ட கும்பல், திடீரென மறைத்து வைத்திருந்த கத்திகளை உருவி பழனியம்மாள் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த திடீர் தாக்குதலில் பலத்த காயமடைந்த 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் ஓடிவந்தனர்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரவீன் பெஞ்சமின், அஜித்குமார், சிவகுமார், ஜான்சன் மற்றும் பிரசாந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
violent act committed due previous enmity 3 people stabbed 5 people arrested What happened