விஜய்-திருமாவளவன் கூட்டணி...? வி.சி.க. அலுவலகத்தில் காவலர்கள் குவிப்பு...! - இன்று தமிழக அரசியலில் பெரும் அதிரடி!
VijayThirumavalavan alliance Police deployed VCK office action Tamil Nadu politics today
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் களமிறங்கப் போவதாக திருமாவளவன் முன்பே அறிவித்திருந்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் போட்டியிடும் முடிவிலிருந்து அவர் விலகியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தேர்தலில் திண்டிவனம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், த.வெ.க. ஆட்சி அமைக்க தேவையான ஆதரவைப் பெறும் முயற்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை விஜய் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் திருமாவளவன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அந்த ஆலோசனையில் பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவு வழங்கலாம் என கருத்து தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் அதற்கு எதிர்ப்பு பதிவு செய்தாலும், கூட்டணி ஆட்சி என்ற அரசியல் அணுகுமுறையை தொடர்ந்து முன்னிறுத்தி வரும் திருமாவளவன், விஜய்க்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை எடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால், அந்தத் தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகும்.இந்த இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்று, த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கும் விவகாரத்தில் இந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், இன்று காலை த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதனால் இன்று காலை முதலே அவர் எத்தகைய அரசியல் முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.மேலும், சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் காவலர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய் அங்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் த.வெ.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.
English Summary
VijayThirumavalavan alliance Police deployed VCK office action Tamil Nadu politics today