அதிமுகவில் ஒன்றிணைப்பு தேவை! தொண்டர்களின் எண்ணமும் அதுதான்– வைத்திலிங்கம் எம்.எல்.ஏ பேட்டி
Unity is needed in AIADMK That is the wish of the workers too Interview with MLA Vaithilingam
தஞ்சாவூர்: அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் உருவாகும் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:“எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர் செங்கோட்டையன். அவர், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற தனது கருத்தை எளிமையாகவும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளிப்படுத்தியுள்ளார். இந்த எண்ணம், அனைத்து தொண்டர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. எனவே, நான் அதை முழு மனதுடன் வரவேற்கிறேன்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியம். செங்கோட்டையன் கூறியதுபோல, இந்தக் கருத்தை நிச்சயம் தொண்டர்கள் அனைவரும் வரவேற்பார்கள்.
ஒன்றிணைப்பு குழு குறித்து எனக்கு இன்று தான் தெரிய வந்தது. எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தாலும், அவருடைய எண்ணத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருவதை நான் கவனிக்கிறேன்.
அவர் 10 நாள் கெடு கொடுத்துள்ளார். அதற்குள் ஒன்றிணைப்பு நடக்கவில்லை என்றால், அவர் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுப்பார் என்று அர்த்தம். அந்த 10 நாள் கெடு முடிந்த பிறகு, எனது கருத்தை வெளிப்படுத்துவேன்.
அதிமுக மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த பாசம் வைத்துள்ளனர். அதனால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணம். இதற்கு தடையாக இருப்பவர்களிடம் மக்கள் கோபமாகவும் இருக்கிறார்கள்.
செங்கோட்டையன், சசிகலாவை சந்தித்து பேசினாரா என்பது குறித்து அவரிடமே கேட்க வேண்டும்.”இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.
English Summary
Unity is needed in AIADMK That is the wish of the workers too Interview with MLA Vaithilingam