அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மூழ்கும் கப்பல்! செல்வப்பெருந்தகை விமர்சனம்!
AIADMK BJP alliance is a sinking ship Selvapperunthakai criticism
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சுதந்திரத்திற்காக தலைவர்கள் போராடி கொடுத்த கருத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமை இன்று பறிக்கப்படுகின்றன. இதை இளம் தலைமுறையே உணர வேண்டும். நாளை மறுநாள் ‘வாக்குத்திருட்டு – வாக்குரிமை பாதுகாப்பு மாநாடு’ காங்கிரஸ் சார்பில் நடத்தப்படுகிறது. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்” என்றார்.
அதேவேளை, பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணியை விமர்சித்த அவர், “இந்த கூட்டணிக்கு மக்கள் ஏற்கனவே கெடு கொடுத்துவிட்டனர். இதனால் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அது மூழ்கும் கப்பல். அதில் ஏறினால் மூழ்கிவிடுவோம் என்ற உணர்வோடு தலைவர்கள் விலகுகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணியை ஏற்க மாட்டார்கள்” என்றார்.
மேலும், “உறவாடி கெடுக்கும் கட்சிதான் பா.ஜ.க. எல்லா மாநிலங்களிலும் சித்து விளையாட்டை நடத்தியுள்ளது. இப்போது அதிமுகவிலும் அதே தந்திரத்தை தொடங்கியுள்ளது. அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டும்” என்றும் எச்சரித்தார்.
அரசியலைத் தொடர்ந்து பொருளாதார பிரச்சனைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். “திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில்கள் மந்தமாக உள்ளன. தூத்துக்குடி துறைமுகம் உட்பட ஏற்றுமதி குறைந்துள்ளது. மக்கள் விலை உயர்வால் அவதிப்படுகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பே ஜி.எஸ்.டி. குறைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். இன்று தான் மத்திய அரசு அதைச் செய்து இருக்கிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சொர்ணா சேது ராமன், மாநில நிர்வாகிகள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ. வாசு, சுரேஷ் பாபு, மகிளா காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் கானப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டு துறை இயல், இசை, நாடக மன்றம் பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகரும், காங்கிரஸ் மாநில கலைப்பிரிவு துணைத் தலைவருமான கலைமாமணி தாராபுரம் கலாராணி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
English Summary
AIADMK BJP alliance is a sinking ship Selvapperunthakai criticism