கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டதால் விபரீதம்... தம்பிக்கு பதிலாக அண்ணன் கொலை...! நடந்தது என்ன...?
Tragedy struck after overhearing college student being teased Brother killed instead younger brother What happened
சென்னை திருவொற்றியூரில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. தம்பியை தேடி வந்த கும்பல், அவர் கிடைக்காததால் அண்ணனை வழிமறித்து கட்டையால் சரமாரியாக தாக்கியதில், பலத்த காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்தவர் சுனில், 22. கடந்த 30-ந் தேதி அண்ணாமலை ரெயில்வே கேட் வழியாக அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு கும்பல், அந்த மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுனில், கும்பலினரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவானது.சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
தகராறுக்குப் பிறகு அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் மது அருந்திவிட்டு மீண்டும் அண்ணாமலை ரெயில்வே கேட் பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.நள்ளிரவு நேரத்தில் சுனிலின் அண்ணன் முனீஸ்வரன், 34, அந்த வழியாக தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை அந்த கும்பல் வழிமறித்து, “சுனில் எங்கே?” எனக் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கு முனீஸ்வரன், சுனில் எங்கு சென்றுள்ளார் என்பது தனக்குத் தெரியாது என பதிலளித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், மறைத்து வைத்திருந்த கட்டையை எடுத்து முனீஸ்வரனை சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தலையில் பலத்த காயமடைந்த முனீஸ்வரன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக முனீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் முனீஸ்வரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் அடிதடி சம்பவமாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு, முனீஸ்வரனின் உயிரிழப்பைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சாத்தாங்காடு காவலர்கள் முதலில் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் எண்ணூர் தாழங்குப்பம் குடியிருப்பைச் சேர்ந்த லோகேஷ்வரன், 21, ஜான்சன், 19, ஜெயந்தன், 19, மற்றும் ஒரு சிறுவன் என 4 பேரை கைது செய்தனர்.
முனீஸ்வரன் உயிரிழந்ததைத் தொடர்ந்து வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தம்பியை தேடி வந்த கும்பல், அவர் கிடைக்காத நிலையில் அண்ணனை குறிவைத்து தாக்கிய சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy struck after overhearing college student being teased Brother killed instead younger brother What happened