ப.சிதம்பரத்துக்கு விஜய் கொடுத்த முக்கிய பொறுப்பு! ராகுலுக்கே தெரியாமல் நடந்ததா? தவெக–காங்கிரஸ் கூட்டணியில் புதிய சலசலப்பு
Key responsibility assigned to P Chidambaram by Vijay Did it happen without Rahul knowledge Fresh stir within the TVK Congress alliance
தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்ட விவகாரம், தவெக–காங்கிரஸ் கூட்டணி அரசுக்குள் புதிய பேசுபொருளாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக நியமித்த விவகாரம், காங்கிரஸ் மேலிடத்திலும் கவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தவெக–காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசின் முக்கியமான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில் பல மூத்த வழக்கறிஞர்களை முதலமைச்சர் விஜய் அண்மையில் நியமித்ததாக கூறப்படுகிறது.
அந்த பட்டியலில் ப.சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞராக ப.சிதம்பரத்தை நியமிக்க விஜய் முடிவு செய்ததாகவும், இந்த முடிவு தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாகவே சிதம்பரத்திடம் நேரடியாக விஜய் தெரிவித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இந்த தகவலை கேட்ட சிதம்பரம் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த நியமனம் குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு, குறிப்பாக ராகுல் காந்திக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வியே தற்போது அக்கட்சிக்குள் விவாதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும் தகவலின்படி, தமிழக அரசு சார்பில் சிதம்பரத்தை நியமிப்பதற்கான அரசாணை வெளியான பிறகே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, “இந்த நியமனம் சிதம்பரம் சாருக்கு முன்கூட்டியே தெரியுமா?” என ராகுல் காந்தி கேட்டதாகவும், அதற்கு கே.சி.வேணுகோபால் தனக்கு தெரியவில்லை என பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, வேணுகோபால் நேரடியாக ப.சிதம்பரத்திடமே இந்த விவகாரம் குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, “எனக்கே இப்போதுதான் தெரியும்” என்று சிதம்பரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், இந்த விளக்கம் காங்கிரஸ் மேலிடத்தின் சந்தேகத்தை முழுமையாக தீர்க்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, சிதம்பரத்தின் நியமனத்தின் பின்னணி குறித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியிடம் கே.சி.வேணுகோபால் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர், பிரவீன் சக்கரவர்த்தி முதலமைச்சர் விஜய்யை தொடர்புகொண்டு இந்த நியமனம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்ததாகவும், அப்போதுதான் சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே தமிழக அரசு அவரை உச்சநீதிமன்ற வழக்கறிஞராக நியமித்தது தெரியவந்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த தகவலை பிரவீன் சக்கரவர்த்தி கே.சி.வேணுகோபாலிடம் தெரிவித்ததாகவும், பின்னர் வேணுகோபால் மீண்டும் ராகுல் காந்தியிடம் இதுகுறித்து விளக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த ராகுல் காந்தி, ப.சிதம்பரத்தின் செயல்பாடு குறித்து வருத்தம் தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியாமலேயே சிலர் தமிழக அரசுடன் நெருக்கமாக செயல்பட முயற்சிப்பதாகவும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இவை காங்கிரஸ் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்கள் என்பதால், ராகுல் காந்தி அல்லது ப.சிதம்பரம் தரப்பில் இதுகுறித்து வெளிப்படையான கருத்து வெளியாகும் வரை இந்த விவகாரத்தின் முழு பின்னணி தெளிவாக தெரியவராது.
தவெக–காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சர்கள் நியமனம் ஒருபுறம் இருக்க, தமிழக அரசின் முக்கிய சட்ட விவகாரங்களில் மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மறுபுறம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் அளவுக்கு சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதும், இந்த நியமனம் தொடர்பான தகவல் காங்கிரஸ் மேலிடத்துக்கு எப்போது சென்றது என்பதும் தற்போது அக்கட்சிக்குள் விவாதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தவெக–காங்கிரஸ் கூட்டணியில் தேசிய அரசியல் மற்றும் 2029 பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் பேசப்பட்டு வரும் நிலையில், ப.சிதம்பரத்தின் நியமன விவகாரம் அந்த கூட்டணிக்குள் மேலும் ஒரு புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
English Summary
Key responsibility assigned to P Chidambaram by Vijay Did it happen without Rahul knowledge Fresh stir within the TVK Congress alliance