“இப்படிப்பட்ட படங்களில் நடிக்க விருப்பமில்லை” – டாக்ஸிக் படத்தை குறிவைத்துதான் டாப்ஸி பேசினாரா?
I have no interest in acting in such films Was Taapsee referring to the movie Toxic
நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நடிகை டாப்ஸி தெரிவித்துள்ள சில கருத்துகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் எந்தப் படத்தின் பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், டாப்ஸியின் பேச்சு டாக்ஸிக் படத்தை பற்றியதுதான் என சமூக வலைதளங்களில் பலரும் தொடர்புபடுத்தி வருகின்றனர்.
பாலிவுட்டில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் டாப்ஸி. வழக்கமான கமர்ஷியல் படங்களை தாண்டி கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்கிறார். இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் கூறிய கருத்துகள் தற்போது இந்திய சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் திரைப்படம் கடந்த 26-ம் தேதி வெளியானது. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள கிளாமர் காட்சிகள் உள்ளிட்ட சில அம்சங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் டாப்ஸி தனது பேட்டியில், சமீப காலங்களில் வெளியாகும் சில திரைப்படங்களை குடும்பத்தினருடன் பார்க்கும்போது, “நான் சினிமாவில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா?” என்று யோசித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்போது உருவாக்கப்படும் சில வகையான திரைப்படங்களில் நடிக்க எனக்கு துளியும் விருப்பமில்லை. என்னுடைய சினிமா பயணம் காலத்தை கடந்து நிற்க வேண்டும் என்பதுதான் ஆசை. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து எனது படங்களை பார்க்கும்போது, நான் செய்த தேர்வுகள் எனக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது” என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய டாப்ஸி, தற்போதைய திரைப்படங்கள் அனைத்தும் வெறும் கமர்ஷியல் வெற்றியை மட்டுமே முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டால், தன்னைப் போன்ற நடிகைகளுக்கு சினிமாவில் நிலைத்திருப்பது கடினமாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
“புகழுக்காகவோ, பணத்திற்காகவோ என்னுடைய தனிப்பட்ட கொள்கைகளுக்கும் சுயமரியாதைக்கும் பொருந்தாத படங்களில் இனி நடிக்கப் போவதில்லை. என்னுடைய சுயமரியாதையை பாதிக்காத வகையில் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கவே விரும்புகிறேன். எதிர்காலத்தில் எனது படங்களை மக்கள் பார்க்கும்போது, நான் தவறான தேர்வுகளை செய்துவிட்டேன் என்று நான் உணரும் சூழல் வரக்கூடாது” என்ற கருத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
டாப்ஸியின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக டாக்ஸிக் திரைப்படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், டாப்ஸியின் கருத்துகள் அந்தப் படத்துடன் இணைத்து பேசப்பட்டு வருகின்றன.
ஆனால், டாப்ஸி தனது பேட்டியில் டாக்ஸிக் படத்தின் பெயரையோ, அதில் நடித்துள்ள நடிகர் அல்லது நடிகைகளின் பெயர்களையோ நேரடியாக குறிப்பிடவில்லை. அவர் பொதுவாக தற்போதைய சினிமா போக்கு குறித்து மட்டுமே தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், டாக்ஸிக் படத்தின் தற்போதைய சூழ்நிலையுடன் அவரது பேச்சை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாப்ஸியின் இந்த துணிச்சலான நிலைப்பாட்டுக்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் அவர் கடந்த காலங்களில் நடித்த சில கமர்ஷியல் திரைப்படங்களையும் சுட்டிக்காட்டி சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால், டாப்ஸியின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
I have no interest in acting in such films Was Taapsee referring to the movie Toxic