திஷா சாலியன் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி இரவு, மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாலிவுட் மேலாளர் திஷா சாலியனின் (26) மரண வழக்கில் தற்போது மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து சரியாக ஆறு நாட்களுக்குப் பிறகு, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை பாந்த்ரா இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சுஷாந்தின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து நடிகை ரியா சக்கரபர்த்தியை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்த நிலையில், திஷா சாலியனின் மரணம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளன.

ஆரம்பத்தில் திஷா சாலியன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி மும்பை காவல்துறை விசாரணையை முடித்தது. ஆனால், தனது மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, திஷாவின் தந்தை சதீஷ் சாலியன் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடற்கூறாய்வு அறிக்கை நகல் வழங்கப்படாததற்குத் தங்களது கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர். அத்துடன் பெற்றோர் முன்வைத்த கொலைக் குற்றச்சாட்டைக் காவல்துறை தீவிரமாக எடுத்துக்கொள்ளாததையும் கண்டித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு, திஷா சாலியன் மரண வழக்கின் விசாரணையை உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு (CBI) மாற்றி அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிபிஐ உடனடியாகப் புதிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, தனி விசாரணை அதிகாரியை நியமித்துத் தேடுதலைத் தொடங்க வேண்டும் என்றும், மனுதாரரான தந்தை சதீஷ் சாலியனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில், முறையான மற்றும் போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரி கண்டறியும் வரை எந்தவொரு நபரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக மர்மமாக நீடித்து வந்த திஷா சாலியனின் மரண வழக்கு தற்போது சிபிஐ கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Disha Salian Death Case Bombay High Court Orders CBI Investigation Into Talent Manager Death


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->