தோட்டத்தில் நேர்ந்த விபரீதம்...! - தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் தாக்கி விவசாயி துடிதுடித்து பலி...!
tragedy occurred garden farmer electrocuted while watering and died
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள கோடங்கால் காந்தி வீதியைச் சேர்ந்த காளிமுத்து என்ற விவசாயி, தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று வயல்வெளியில் பணியில் ஈடுபட்டிருந்த காளிமுத்து, மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது மின்மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவு, தண்ணீர் வழியாக வேகமாக பரவி அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீரென மின்சாரம் தாக்கியதில் காளிமுத்துவின் இடுப்பு மற்றும் இரு கால்களிலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. வலி தாங்க முடியாமல் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, காளிமுத்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குடும்பத்தின் ஆதாரமாக இருந்த விவசாயியின் திடீர் உயிரிழப்பு, உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த காளிமுத்துவுக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். விவசாயத்தை மட்டுமே நம்பி குடும்பத்தை நடத்தி வந்த அவரது மரணம், அப்பகுதியில் பெரும் சோக நிழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக கடம்பூர் காாவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு ஏற்பட்ட விதம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
tragedy occurred garden farmer electrocuted while watering and died