நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை அடைப்பு...ஏன் தெரியுமா?
Tomorrow there will be a closure at the Meenakshi Amman Temple in Madurai Do you know why?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடைபெறும். எனவே நாளை (3.9.2025) காலை முதல் இரவு வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு லீலை அலங்காரம் நடைபெறுகிறது. அவ்வகையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நாளை நடக்கிறது.
இதற்காக சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலைகோவிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு செல்வார்கள். மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடைபெறும் என்பதால் இரவுதான் கோவிலுக்கு திரும்ப உள்ளனர்.
சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி இரவு மீண்டும் கோவிலுக்கு வரும் வரை கோவிலின் நடை சாத்தப்பட்டு இருக்கும். எனவே நாளை காலை முதல் இரவு வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமி இரவு கோவிலுக்கு வந்த பிறகு மீண்டும் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். இரவு சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் சமயத்தில் சுவாமியையும், அம்பாளையும் தரிசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் தங்களின் பயணத் திட்டத்தை முடிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் பகலில் கோவில் நடை சாற்றப்பட்டிருந்தாலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆடி வீதிகள் மற்றும் ஆயிரம்கால் மண்டபம் திறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
Tomorrow there will be a closure at the Meenakshi Amman Temple in Madurai Do you know why?