டிரம்பின் உருவ பொம்மைக்கு அடையாள இறுதி ஊர்வலம்: மத்திய பிரதேசத்தில் நூதன போராட்டம்..!
A symbolic funeral procession for Trump's effigy in Madhya Pradesh sparks a new protest
ரஸ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீது 50% இறக்குமதி வரியை விதித்துள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்குத் துரோகம் இழைப்பதாகவும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் ‘பகவா கட்சி’ என்ற அமைப்பு, டிரம்பின் உருவ பொம்மைக்கு அடையாள இறுதி ஊர்வலம் நடத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொண்டர்கள், டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, டிரம்பின் பதின்மூன்றாம் நாள் சடங்குக்கான அழைப்பிதழ்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். இதனை தொடர்ந்து 13 நாட்கள் கழித்து அவருக்காக நினைவு விருந்து நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
வரும் நாட்களில் ‘சுதேசிப் பொருட்களை ஆதரிப்போம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்க மக்களை வலியுறுத்தப் போவதாகவும் பகவா கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் உருவ பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
A symbolic funeral procession for Trump's effigy in Madhya Pradesh sparks a new protest