'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் - தமிழக அரசு!
TNGovt Ungaludan Stalin
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
ஜூலை 15ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மக்களுக்கு அரசு சேவைகளை நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில், மாவட்டம், ஊராட்சி பகுதிகள் என மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில், மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களும் இந்த முகாம்களில் பெறப்படுகின்றன.
நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த முகாம்கள் மூலம், அரசுத் திட்டங்களை பொதுமக்கள் எளிதாகப் பெறும் விதமாக மையங்கள் செயல்படுகின்றன. இதுவரை வந்துள்ள 12.65 லட்சம் மனுக்களில், 5.88 லட்சம் மனுக்கள் மகளிர் உரிமைத் தொகையைப் பெறும் கோரிக்கையாக உள்ளன.
மனுக்கள் பெறப்பட்ட பின், அவற்றின் மீது 45 நாளுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இந்த முயற்சி, மக்களுக்கு நேரடி நலத்திட்ட அனுபவத்தை வழங்கும் புதிய செயல் முறை என பார்க்கப்படுகிறது.