திமுக தோல்வி நிச்சயம்..ஆட்சியை விட்டு இறங்கியதும் வீட்டுக்கு போக மாட்டாங்க! திகார் சிறைக்குத்தான் போவார்கள்! கடம்பூர் ராஜூ பேச்சு!
DMK defeat is certain they wonot go home after leaving powerThey will go to Tihar Jail Kadambur Raju speech
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 தேதிகளில் நடைபெற உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.
அவரது உரையில், “நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி இருந்திருந்தால் 40க்கு 40 வெற்றி பெற்றிருப்போம் என சிலர் கூறினர். எனக்கு அந்த கூற்று மீது உடன்பாடு இல்லை. தற்போது திமுக அரசு தீவிர சிக்கலில் உள்ளது. ICU நிலைக்கே சென்றுவிட்டது. அவர்கள் ஆட்சி முடிவுக்கு வருவது நிச்சயம்,” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை தீவிரமாக கவனித்து வருவதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷா உட்பட தலைவர்கள் நேரடியாக தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“திமுகவுக்கு மாற்று அதிமுக தான். மக்களும் அதே தீர்ப்பை வழங்கத் தயார் நிலையில் இருக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியை பார்த்தபோது பதற்றத்துடன் இருந்தார். எப்போது என்னவாகும் என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
மேலும், “1998ல் பாஜக கூட்டணியை விட்டு விலகியதுதான் வரலாற்றுப் பிழை. பாஜகவும் அதிமுகவும்தான் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம். திமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. திமுக இன்று வீடு வீடாக சென்று ஆதரவை கோர வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. இது தான் அவர்கள் தோல்வி பயத்தில் இருப்பதற்கான குறிகுறி,” என்றும் குறிப்பிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றது குறித்து பேசும் போது, “அவரது உடல்நலம் விரைவில் மீண்டும் கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். ஆனால் அவர் தலைமையிலான திமுக அரசு மட்டும் தோல்வியடைய வேண்டும்,” என்றார்.
பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பற்றி பேசும் போது, “அவர் திறமைமிக்க நிதியமைச்சர். மத்திய அமைச்சரவை ஒரு புத்திசாலி குழு. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வல்லரசாக மாறியுள்ளது. அவருக்கென்று தனிப்பட்ட குடும்பம் இல்லாது, நாடே அவரது குடும்பமாக இருக்கின்றது,” என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அதிமுக-பாஜக கூட்டணிக்கு மிகுந்த மக்கள் ஆதரவு இருக்கிறது என்றும், “நாங்கள் சேர்ந்து 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப்போகிறோம். அந்த நம்பிக்கையை ‘தெய்வீக சிரிப்பு’ என்ற வார்த்தையில் பிரதிபலிக்கிறேன்,” எனக் கூறிய கடம்பூர் ராஜூ, கடைசியில், “இது மாற்றத்துக்கான காலம். மக்கள் அதை உணர்ந்துவிட்டார்கள். அதிமுக-பாஜக ஆட்சி தான் தமிழகத்தின் எதிர்காலம்” என உறுதியுடன் கூறினார்.
English Summary
DMK defeat is certain they wonot go home after leaving powerThey will go to Tihar Jail Kadambur Raju speech