முதலமைச்சர் விஜய்க்கு வேல்' வழங்கி தவெக வேட்பாளர் உற்சாக வரவேற்பு!
TN CM Vijay Launches Madurantakam Bypoll Campaign with MGR Tribute Presented Sacred Vel by Candidate
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று பிரமாண்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னையில் இருந்து வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி பேண்ட் உடையில் சாலை மார்க்கமாகக் காரில் புறப்பட்ட முதலமைச்சருக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை:
மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய்யை தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து, அங்குள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய முதலமைச்சர், தனது இடைத்தேர்தல் பிரசாரப் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.
பாதுகாப்பும் மக்கள் கூட்டமும்:
பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், முதலமைச்சரைக் காண அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பெருந்திரளான மக்கள் கூட்டமாகத் திரண்டனர். செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பல போலிசார் சீருடையின்றியும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் திடலில் வரவேற்பு & 'வேல்' பரிசு:
மதுராந்தகம் அருகே ஆத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தவெக கூட்டத் திடலுக்கு முதலமைச்சர் விஜய் வந்தடைந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் மரிய வில்சன், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கோலாகலமாகத் தொடங்கிய கூட்டத்தில், மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை மேடையில் முதலமைச்சர் விஜய் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, தொகுதிக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு வேட்பாளர் மரகதம் குமரவேல் 'வேல்' ஒன்றைப் பரிசாக வழங்கி தனது நெகிழ்ச்சியான வரவேற்பைப் பதிவு செய்தார்.
English Summary
TN CM Vijay Launches Madurantakam Bypoll Campaign with MGR Tribute Presented Sacred Vel by Candidate