காலை உணவில் விபரீதம்...? திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் சேமியா கிச்சடி சாப்பிட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு...!
Something went wrong with breakfast Students Thiruchengode Government School fell ill after eating Semiya Khichdi
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சேமியா கிச்சடி வழங்கப்பட்டது.மாணவர்கள் ஆர்வத்துடன் காலை உணவை சாப்பிட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே சில மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அடுத்தடுத்து 14 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் வகுப்பறைகளில் பரபரப்பு நிலவியது.மாணவர்களின் உடல்நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக அவர்களை மீட்டு மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். சமையல் கூடத்தில் தயாரிக்கப்பட்ட சேமியா கிச்சடியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.மேலும், சம்பவம் குறித்து காவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பதும், உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் குறைபாடுகள் இருந்தனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம், மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Something went wrong with breakfast Students Thiruchengode Government School fell ill after eating Semiya Khichdi