அதிர்ச்சிச் செய்தி...! நாளை முதல் தனியார் பால் மற்றும் தயிர் விலை அதிரடி உயர்வு..! - பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கைவரிசை
Private milk and yogurt prices to increase dramatically from tomorrow Hand wringing public monthly budget
பால் கொள்முதல் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, அதன் சுமை தற்போது நுகர்வோரின் பக்கம் திரும்பியுள்ளது. ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 அதிகரிக்கப்பட்ட நிலையில், தனியார் பால் நிறுவனங்களும் தங்களது கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளன. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு பால் கொள்முதல் செய்யப்படுவதால், உற்பத்தி மற்றும் கொள்முதல் செலவினங்களை ஈடுகட்ட விற்பனை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ந் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையும், தயிர் விலையை கிலோவுக்கு ரூ.2 வரையும் உயர்த்தி இருந்தது.இந்த நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களும் நாளை முதல் விற்பனை விலையை உயர்த்துகின்றன. பால் வகையை பொறுத்து லிட்டருக்கு ரூ.4 வரை இந்த விலை உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆக அதிகரிக்கிறது. நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் உயர்த்தப்படுகிறது.ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.59-ல் இருந்து ரூ.61 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68-ல் இருந்து ரூ.70 ஆகவும் விலை அதிகரிக்கிறது. கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.78-ல் இருந்து ரூ.81 ஆக உயர்த்தப்படுகிறது.
இதுதவிர, 500 கிராம் தயிரின் விலையும் ரூ.1 அதிகரிக்கிறது.தனியார் பால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றுக்கும் ஆவின் பாலுக்கும் இடையிலான விலை வேறுபாடு கணிசமாக அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் பால், வகையை பொறுத்து ஆவின் பாலை விட லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.14 முதல் அதிகபட்சம் ரூ.30 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தனியார் பால் விலை உயர்வால், தினசரி பால் வாங்கும் குடும்பங்களின் மாதாந்திர செலவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் விலை குறைவாக உள்ள ஆவின் பாலை நாடும் சூழல் உருவாகலாம்.இதனால் ஆவின் பாலுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், மாநிலம் முழுவதும் அதன் விற்பனையில் கூடுதல் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Private milk and yogurt prices to increase dramatically from tomorrow Hand wringing public monthly budget