திருப்பூரில் தலையை நசுக்கி கொலை செய்யப்பட்ட நர்ஸ்! 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!
Tiruppur nurse murder police investigation
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் இளம்பெண் ஒருவர் தலை நசுக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
தலையில் பெரும் கல்லால் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அவரைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பிங்க் நிற செவிலியர் சீருடையில் இருந்த அந்த பெண், மதுரையைச் சேர்ந்த சித்ரா (வயது 28) என அடையாளம் காணப்பட்டார்.
அவர், பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 நாட்களுக்கு முன்பு செவிலியராக பணியில் சேர்ந்திருந்தார். திருமணமான சித்ராவிற்கு ஒரு குழந்தை உள்ளது. கணவர் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே வெளியான தகவலின்படி, ராஜேஷ் கண்ணா அவரது வீட்டு அருகே வந்திருந்ததும், பின்னர் தலைமறைவானதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ராஜேஷ் கண்ணாவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
English Summary
Tiruppur nurse murder police investigation