திருப்பூரில் பெரும் சோகம்! விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் பலி!
Thiruppur Factory Accident
திருப்பூர் அருகே கரைப்புதூரில் உள்ள சாய ஆலை ஒன்றில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்களும் விஷவாயுவால் மயக்கம் அடைந்தனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவீன் என்பவருக்கு சொந்தமான இந்த சாய ஆலைவில் சுமார் 70 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் கீழ் சுமார் 7 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியை திங்கட்கிழமை சுத்தம் செய்யச் சென்ற தொழிலாளர்கள் சரவணன் (30), வேணுகோபால் (31), ஹரி (26), சின்னச்சாமி (36) ஆகியோர் திடீரென விஷவாயுவால் பாதிக்கப்பட்டனர்.
உடனே சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சரவணன் மற்றும் வேணுகோபால் இருவரும் மரணம் அடைந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஹரி மற்றும் சின்னச்சாமி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தோரின் சடலங்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
English Summary
Thiruppur Factory Accident