ரூ.200 கோடி மோசடி: சசிகலா பினாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: சிக்கிய முக்கிய ஆவணங்கள்..!
ED raids Sasikala's proxy house in connection with Rs 200 crore loan fraud
வங்கியில் 200 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது மற்றும் பினாமி சொத்துக்கள் தொடர்பாக, சென்னை மற்றும் ஹைதராபாதில், சசிகலாவின் பினாமி வீடு உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சசிகலா, அவரது உறவினர்கள் தினகரன், திவாகரன் வீடு, அலுவலகம் என 197 இடங்களில், 2017-இல் வருமான வரித்துறை அதிகாரிகள், நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். சசிகலாவின் பினாமியான கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த, மார்க் குழுமத்தின் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியநிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

குறித்த சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதன்படி, 2016-இல் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பத்மாவதி சர்க்கரை ஆலையை, சசிகலா 450 கோடி ரூபாய் செல்லாத நோட்டு கொடுத்து, பினாமி பெயரில் வாங்கியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் நடத்தி வந்தனர்.
தொடர் விசாரணையில், சசிகலாவின் பினாமிகள், 200 கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்தது, பினாமிகள் பெயரில் சசிகலா சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், இந்த மோசடியில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், சென்னை மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள சசிகலாவின் பினாமி வீடு மற்றும் மொத்த நகை வியாபாரிகள் வீடு என, ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
அத்துடன், சென்னை சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் உள்ள சசிகலாவின் பினாமியான, மார்க் குழுமத்தின் இயக்குநரான ராமகிருஷ்ண ரெட்டி வீடு, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தங்க நகை மொத்த வியாபாரியான மோகன்லால் காத்ரி வீடு மற்றும் சவுகார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடந்ததுள்ளது. இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
ED raids Sasikala's proxy house in connection with Rs 200 crore loan fraud