தமிழ்நாடு கல்விக் கொள்கையை புதுச்சேரி அரசு பின்பற்ற வேண்டும்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல் !
The Puducherry government should follow the Tamil Nadu education policy Opposition leader Shivas insistence
புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் தழைக்க மீண்டும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை புதுச்சேரி அரசு பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் மக்கள் திரள் போராட்டத்தை தி.மு.கழகம் முன்னெடுக்க நேரிடும் என்றும் புதுச்சேரி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –ஒரு இயக்கத்தின் நோக்கம் என்பது தான் சார்ந்துள்ள சமூகத்தின் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்து இன்றைய தேவைகளை கணக்கீடு செய்து எதிர்கால கனவுகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை – கொள்கைகளை வரைவு செய்வதாக அமைய வேண்டும். அப்படித்தான் தமிழ்நாடு அரசின் இன்றைய மாநில கல்விக் கொள்கை மிக தெளிவாகவும் எதிர்கால தமிழ் சமூகத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய பாரதிய ஜனதா அரசு ஆர்எஸ்எஸ்–ன் சமூக, சமத்துவமின்மையை குறிக்கோளாகக் கொண்டு வெளிக்கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை என்பது பெரும்பான்மை உழைக்கும் சமூகம் கல்வி அறிவின்றி கீழ்நிலையில் உழல்வது மான திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. ஆனால் எல்லோர்க்கும் எல்லாம் என்ற பரந்த மனப்பான்மையையும், சமூக நீதியையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது, பாராட்டக்குறியது ஆகும். இத்தகைய திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புதுச்சேரி மக்கள் சார்பில், புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் நன்றி செலுத்துகிறது.
5ம் வகுப்பில், எட்டாம் வகுப்பில், 10ம் வகுப்பில், 12ம் வகுப்பில் அரசு தேர்வுகளை நடத்தி பெரும்பான்மை மாணவர்களை கல்வித் தளத்தில் இருந்து வெளியேற்றும் பாஜக–வின் திட்டத்தை முறியடித்து எட்டாம் வகுப்பு வரை தேர்வே இல்லை என்றும், 10 மற்றும் 12–ஆம் வகுப்புகளில் மட்டும் அரசு தேர்வு என்றும் தமிழ்நாடு கல்வித்துறை பரைசாற்றுகிறது. கடந்த அதிமுக அரசு கொண்டு வந்த 11–ஆம் வகுப்பு தேர்வையும் இஃது ரத்து செய்கிறது.
ஒன்றிய அரசு நீட் தேர்வை திணித்த போது அன்றைய அதிமுக அரசு அதற்கு ஏற்றார்போல் புதிதாக 11–ஆம் வகுப்பில் அரசு தேர்வை கொண்டு வந்து, 11, 12–ஆம் வகுப்புகளின் சராசரி மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தான் கல்லூரி படிப்பிற்கு செல்ல முடியும் என்ற மோசமான நிலையை உருவாக்கியது. இதனை எதிர்த்து புதுச்சேரி தி.மு.கழக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பரிமளம் அவர்கள் 2018–ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் 11–ஆம் வகுப்பு மதிப்பெண்ணை சேர்ப்பது விலக்கப்பட்டது. அப்படிப்பட்ட 11–ஆம் வகுப்பு தேர்வு இன்றைக்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அச்சம் நிறைந்த தேர்வுகள் குறித்த மாணவர்களின் மன அழுத்தம் தவிர்க்கப்படுகிறது.
மேலும், அத்துடன் ஆங்கிலம், தமிழ் என்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டை வழிநடத்தும், இந்தி என்ற மூன்றாவது மொழிக்கு இங்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறி உள்ளது. மூடநம்பிக்கையும், பகுத்தறிவிற்கு புறம்பான கொள்கைகளையும் தவிர்த்து பகுத்தறிவு கருத்துக்களுக்கே இடமுன்டு என்றும், அறிவை வளர்க்கும் கல்வியோடு, உடற்பயிற்சிக் கல்விக்கு முக்கியத்துவம் தருவதுடன், சமூக நீதி நிலைநாட்டவும் இன்றைய தேவைக்கேற்ப செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்பங்களை முன்னெடுக்கும் கல்வியாக இது இருக்கும். மேலும், இக் கல்விக் கொள்கை மனப்பாடம் செய்வதை தவிர்த்து புரிந்து கொண்டு கற்கும் நிலையை வளர்ப்பதுடன் பெண் கல்வி, பாலின சமத்துவத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது. 3–ஆம் வகுப்பில் காலடி வைக்கும் பொழுதே எழுத்தறிவு – எண்ணறிவில் தேறியவர்களாக மாணவர்கள் வளர்த்தெடுக்கப் படுவர்.
இப்படிப்பட்ட கல்வி கொள்கையை புதுச்சேரி அரசு பின்பற்ற வேண்டும் என்று தி.மு.கழகம் பரிந்துரைக்கிறது. இன்றுவரை புதுச்சேரியில் அனைத்து கொள்கைத் திட்டங்களும் தமிழ்நாடு அரசைப் பின்பற்றியே வருகிறது. ஆனால் கல்வியில் மட்டும் நேற்று வரை தமிழ்நாடு கல்வி முறையைப் பின்பற்றி வளர்ச்சிப் பாதையில் சென்ற புதுச்சேரி, பாஜக–என்.ஆர். காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு ஒன்றிய அரசின் நிர்பந்தம் காரணமாக புதிய கல்வித் திட்டத்தை ஏற்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறி இந்தியை திணித்து மாணவர்களின் வாழ்வை பின்தள்ளி உள்ளது. அதனால் தான் ஒன்றிய அரசின் அறிவிப்பு படி 10 ஆயிரம் மாணவர்களின் இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது. இது இம்மாநில எதிர்கால சந்ததிகளான மாணவர்களின் வாழ்வை பாழ்படுத்துவதாகும்.
ஆகவே, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்ற ரீதியில் தி.மு.கழகம் இந்த அரசை எச்சரிக்க விரும்புகிறது. புதிய கல்விக் கொள்கையை கைவிட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்விக் கொள்கையை பின்பற்றிட வலியுறுத்துகிறது. இல்லையேல் மாணவர்களை அணிதிரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்திற்கு தயாராகிவிடுவோம் என்று அறைகூவல் விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
The Puducherry government should follow the Tamil Nadu education policy Opposition leader Shivas insistence