தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்..!
The Madras High Court has issued a significant order regarding the appointment of 4000 Assistant Professor posts
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக 1,146 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக சிறப்புத் தேர்வு நடத்தி, உதவி பேராசிரியர்களாக நியமிப்பது தொடர்பாக 2020-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்பின்னர், அந்த அரசாணையை 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. அதன்படி, 03 ஆண்டுகளாக காலியாக இருந்த 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, 2022-ஆம் ஆண்டு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து 2024-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். அதன்பின்னர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதன் போது, தனி நீதிபதியின் உத்தரவு உச்ச நீதிமன்றம் வகுத்தளித்த போட்டித் தேர்வு நடைமுறை கொள்கையை நீர்த்துப்போகச் செய்துவிடும் என நீதிபதிகள் குறிப்பிட்டு, "பணி வரன்முறை என்பதும், தேர்வு நடைமுறை என்பதும் வெவ்வேறானவை எனவும், பணி வரன்முறையை உரிமையாக கோர முடியாது'' என்றும் தெரிவித்தனர்.

அத்துடன், 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை 06 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள், வயது வரம்பு தளர்வு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
மேலும், தேர்வு நடைமுறை முடிந்து நியமன உத்தரவுகள் வழங்கும் வரை கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே, 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்த வழக்கில் சென்னை நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
English Summary
The Madras High Court has issued a significant order regarding the appointment of 4000 Assistant Professor posts