வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமல்!
The employment incentive scheme will be implemented from August 1st
இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இ.எல்.ஐ. திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதனை தொடர்ந்து இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தநிலையில் இந்த திட்டத்தை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள ,சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இ.எல்.ஐ. திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் 3½ கோடி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அமைப்புசாரா தொழில்துறைகளில் உள்ளவர்கள் அமைப்பு சார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இதனை தகுதியான அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழிலாளர்களை சேர்க்கும் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதன்படி, ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை நிறுவனத்தில் சேர்க்கும்போது ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஆயிரம் ரூபாய் வீதமும், ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளத்தில் தொழிலாளர்களை சேர்க்கும்போது ரூ.2 ஆயிரம் வீதமும், ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை சேர்க்கும் பட்சத்தில் ரூ.3 ஆயிரம் வரையிலும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இந்த திட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன" என்று அவர் கூறினார்.
English Summary
The employment incentive scheme will be implemented from August 1st