சோழிங்கநல்லூரில் பயங்கரம்...! சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து...! - 6 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


சென்னை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் நடைபெற்ற சாலை விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. எதிரே வந்த லாரிக்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து சாலையோர சதுப்பு நிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 6 பேர் காயமடைந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் பெரும் ஆபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சென்னை அடையாறில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி இயக்கப்பட்ட மாநகரப் பேருந்து (தடம் எண் 99), நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் தனது வழக்கமான பயணத்தை மேற்கொண்டிருந்தது. பேருந்தை சாமிதாஸ் (50) ஓட்டிச் சென்றார். ராமச்சந்திரன் நடத்துநராக பணியாற்றிய நிலையில், பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக வந்த பேருந்து, பெரும்பாக்கம் வழியாக மேடவாக்கம் செல்லும் செம்மொழி பூங்கா சாலையை அடைந்தது. அந்தப் பகுதியில் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளும், மழைநீர் வெளியேறும் வகையில் தரைப்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால், சாலையின் ஒரு பகுதி மட்டும் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டு, ஒருவழிப் பாதையாக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்தச் சூழலில், எதிர்திசையில் வந்த லாரிக்கு பாதுகாப்பாக வழிவிடும் நோக்கில் பேருந்தை ஓட்டுநர் இடதுபுறமாக திருப்பியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சதுப்பு நிலத்திற்குள் சரிந்து கவிழ்ந்தது. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறியடித்தனர்.

விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பத்திரமாக வெளியே மீட்டனர்.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சாமிதாஸ் காயமடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், இரண்டு பெண்கள் உட்பட 5 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நடத்துநர் மற்றும் மற்ற 15 பயணிகள் எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பினர்.இந்த விபத்தால் சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையின் இருபுறங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை துணை ஆணையர் பிரபாகரன், உதவி ஆணையர்கள் வெங்கடேசன், சரவணன் மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள், செம்மஞ்சேரி காவலர்கள் ஆகியோர் இரண்டு ராட்சத கிரேன்களின் உதவியுடன் சதுப்பு நிலத்தில் கவிழ்ந்திருந்த பேருந்தை மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியதுடன், முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

மீட்புப் பணிகள் மற்றும் பேருந்தை அகற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terror Sholinganallur City bus overturns swamp 6 people seriously injured


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->