சென்னை மற்றும் புறநகரில் பரவும் மர்ம காய்ச்சல்: மக்களே உஷார்...! - மருத்துவர்கள் முக்கிய எச்சரிக்கை...!
Mysterious fever spreading Chennai and suburbs People beware Doctors issue important warning
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக காய்ச்சலால் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்டு மாதத்தில் காய்ச்சல் பாதிப்புடன் சுமார் 4,500 பேர் சிகிச்சைக்காக வந்த நிலையில், அவர்களில் 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அவர்களில் 140 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாத நிலவரத்துடன் ஒப்பிடும்போது, தற்போது டெங்கு பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடையாறு, அண்ணாநகர் மற்றும் வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்புளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்.எஸ்.வி. உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகளும் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எளிதில் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள், பழைய பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள், கழிவுகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றி தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Mysterious fever spreading Chennai and suburbs People beware Doctors issue important warning