அநாகரிகப் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது...! - திமுகவினரை கடுமையாக எச்சரித்த கனிமொழி...!
Indecent speech is unacceptable Kanimozhi sternly warns DMK members
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசியலில் மிசா கால கொடுமைகள் குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.இந்த சூழலில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் தியாகத்தை முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர்.

இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசிய சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பின. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் அநாகரிகமான பேச்சு சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில், “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளை பதிவிட்டுள்ளார்.
எந்த விஷயத்தை காக்கத் தவறினாலும், நாவை மட்டும் கட்டுப்பாட்டுடன் காக்க வேண்டும் என்பதையும், தவறான சொற்கள் பின்னர் துன்பத்துக்கு காரணமாகிவிடும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் இந்த திருக்குறளை அவர் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் திருக்குறள் மூலம் மறைமுகமாக கண்டனம் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Indecent speech is unacceptable Kanimozhi sternly warns DMK members