தமிழகத்தில் 3 பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை - தமிழக அரசு அறிவிப்பு!
tamilnadu TN Govt pre testing census
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ. 10 முதல் நவ. 30 வரை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், "2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது குறித்து, இந்திய அரசின் அறிவிப்பானது 16.06.2025 தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் (அறிவிப்பு எண். S.O. 2681) வெளியிடப்பட்டு, அது 16.07.2025 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் மீண்டும் வெளியிடப்பட்டது.
மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 பிரிவு 17எ - ன் படி, 16.10.2025 தேதியிட்ட இந்திய அரசிதழ் அறிவிப்பு எண். S.O. 4698(E) இல் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் 2027 ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான முன்-சோதனையை நடத்த இருக்கிறது.
இந்த முன்-சோதனையானது, 2027 ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பிற்க்கு முன் நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம் மற்றும் ஆயத்தப் பணியாகும்.
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பிற்க்கு முன்மொழியப்பட்ட கருத்துகள், நடைமுறைகள், கேள்வித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகளை மதிப்பிடுவதற்காக இந்த முன்-சோதனை நடைபெறவுள்ளது. 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பானது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும். இந்த முன்-சோதனையின் முடிவுகள், 2027 ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, எதிர்நோக்கவிருக்கும் செயல்பாட்டு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.
முதல் முறையாக, முன்-சோதனையின்போது, மொபைல் செயலிகளைப் பயன்படுத்தித் தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும் வரையப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CMMS) வலைத் தளம் மூலம் இந்த முழு செயல்பாடுகளும் நிர்வகிக்கப்படும், இது நிகழ்நேர மேற்பார்வை மற்றும் முன்னேற்ற கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்ட வலைத் தளமாகும்.
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ. 10 முதல் நவ. 30 வரை நடைபெறவுள்ளது, இதனுடன் நவ. 1 முதல் நவ. 7 வரை சுய-கணக்கெடுப்பு (Self-enumeration) செய்வதற்கான முன்- சோதனையும் நடைபெறவுள்ளது.
முன்-சோதனைக்காக தமிழ்நாடு மாநில அரசுடன் கலந்தாலோசித்து மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:
• கிராமப்புற பகுதி - அஞ்செட்டி வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்
• கிராமப்புற பகுதி - ஆர்.கே. பேட்டை வட்டத்தின் ஒரு பகுதி, திருவள்ளூர் மாவட்டம்
• நகர்ப்புற பகுதி - மாங்காடு நகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம், முன்-சோதனை சுமுகமாக நடைபெறுவதற்கு, தொழில்முறை வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் மேற்பார்வை உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்.
மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளிலுள்ள அலுவலர்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் செயல்படுவார்கள். களப்பணிகளுக்கு முன் கணக்கெடுப்பாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முன்-சோதனையின் போது மக்கள்தொகை கணக்கெடுப்பு களப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
களப்பணியாளர்களுடன் துல்லியமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் அது, கணக்கெடுப்பின்போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் செயலிகள் மற்றும் செயல்முறைகளைச் செம்மைப்படுத்த உதவும், இந்த முன்-சோதனையானது, 2027 ஆம் ஆண்டு வெற்றிகரமான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வழி வகுக்கும். நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2027 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அதிக துல்லியம், செயல்திறன் மற்றும் தயார்நிலையை உறுதி செய்ய இந்தப் முன்-சோதனை பயிற்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu TN Govt pre testing census