தமிழக சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க.,விடம், 75 தொகுதிகளை கேட்க பா.ஜ., முடிவு..!
The BJP has decided to ask the AIADMK for 75 constituencies in the Tamil Nadu assembly elections
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., இடம்பெற்றுள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, 18 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விடம், 75 தொகுதிகளை கேட்கவும், 50 தொகுதிகளை பெறவும், தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகளையும், சட்டசபை தொகுதி வாரியாக ஒப்பிட்டு பார்த்தால், 83 தொகுதிகளில் அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., இரண்டாவது இடம்பிடித்துள்ளது. அதன் அடிப்படையில் வரும் சட்டசபை தேர்தலில், 80 தொகுதிகளை அ.தி.மு.க.,விடம் கேட்க வேண்டும் என, மேலிட தலைவர்களிடம், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன் சந்தித்து பேசினார். அப்போது, இரு கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டுள்ளது.
இதன்போது கூட்டணியில் அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பா.ஜ., எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்க, அ.தி.மு.க., விரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்களை அமித்-ஷாவிடம் தெரிவிக்க, நயினார் நாகேந்திரன் டில்லி சென்றார். அத்துடன், அவர் டில்லி செல்லும் முன், ஒரு மணி நேரம் இ.பி.எஸ். உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அ.தி.மு.க., தலைமையிடம், 75 தொகுதிகளை கேட்கும் வகையில், தொகுதி பங்கீட்டு பேச்சை தொடங்கவேண்டும் என்றும், 50 தொகுதிகளை உறுதியாக பெற வேண்டும் என்றும் அமித் ஷாவிடம், நயினார் நாகேந்திரன் வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி பாஜக, அதிமுகவிடம் கேட்ட தொகுதிகள்:
மொடக்குறிச்சி,ஊட்டி, கோபிசெட்டிப்பாளையம், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கடலுார், காங்கேயம், மதுரை,அவிநாசி,ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஆரணி, கள்ளக்குறிச்சி, வேளச்சேரி, தி.நகர், திருக்கோவிலுார், திண்டுக்கல்.
ஆகிய 20 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அந்த தொகுதிகளை கட்டாயம் கேட்டு பெற்றுக்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளது.
English Summary
The BJP has decided to ask the AIADMK for 75 constituencies in the Tamil Nadu assembly elections