பெண்ணையாறு பிரச்சினை; அரசு எடுத்த முயற்சிகளின் விளைவாக நல்ல தீர்ப்பு; அமைச்சர் துரைமுருகன் மகிழ்ச்சி..!
Minister Duraimurugan said that a favorable verdict has been obtained as a result of the efforts made by the government in the Pennaiyar river issue
'பெண்ணையாறு பிரச்சினையை தீர்க்க, ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒன்றிய அரசு நிறைவேற்றும் என தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விரிவாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
"பெண்ணையாறு மற்றும் அதன் கிளை நதியான மார்கண்டேயா நதி 1892-ஆம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்திற்கு உட்பட்ட நதி என்பதால், கர்நாடக அரசு அதன் குறுக்கே கட்டுமானங்களை மேற்கொள்ள தமிழ்நாட்டின் இசைவை பெற வேண்டும்.
ஆனால் தன்னிச்சையாக கர்நாடக அரசு மார்கண்டேயா நதி குறுக்கே எர்கோல் கிராமத்தில், பங்காரப்பேட்டை தாலுக்காவில் ஒரு அணையையும் மற்றும் பெண்ணையாற்றிலிருந்து சில நீரேற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை தடுக்க ஆணையிடுமாறு உச்சநீதிமன்றத்தில் 18.05.2018 அன்று தமிழ்நாடு அரசு அசல் வழக்கை (OS 1 of 2018) தாக்கல் செய்தது. இதில் உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசிற்கு ஆணையிட்டது.

ஆனால், ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகம், ஓர் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் குழுவை (Negotiation Committee) ஜனவரி, 2020-இல் அமைத்தது. இக்குழு 31.07.2020 அன்று தனது இறுதி அறிக்கையில், நடுவர் மன்றத்தை ஜல்சக்தி அமைச்சகம் அமைக்கலாம் என பரிந்துரைத்தது. ஆனால் ஒன்றிய அரசு நடுவர் மன்றம் அமைப்பதை தாமதித்து வந்தது.
இச்சூழ்நிலையில் இந்த அரசு பதவி ஏற்றவுடன் முதலமைச்சரின் ஆலோசனைப்படி நான் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை 06.07.2021 இல் நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க கேட்டுக் கொண்டேன்.
இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசிற்கு கடிதங்கள் வாயிலாகவும் நடுவர் மன்றம் அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், ஒன்றிய அரசு. நடுவர் மன்றம் அமைப்பதை எந்த முகாந்திரமும் இல்லாமல் தாமதப்படுத்தியதல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை குழு அமைக்க கேட்டுக்கொண்டது. உச்சநீதிமன்றத்தின் 23.01.2024 தேதியிட்ட ஆணையின்படி 2வது பேச்சுவார்த்தைக் குழுவை, ஜல்சக்தி அமைச்சகம் 07.02.2024 அன்று அமைத்தது. இச்சூழலில் மீண்டும் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை 25.07.2024 அன்று நேரில் சந்தித்து நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தினேன்.
2வது பேச்சுவார்த்தைக் குழு, பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்பதை தனது இறுதி அறிக்கையில் 30.09.2024 அன்று ஜல்சக்தி அமைச்சகத்தின் பரிசீலனைக்காக சமர்ப்பித்துள்ளது. ஒன்றிய அரசு நடுவர் மன்றம் அமைப்பதை மேலும் தாமதித்து வந்ததால் 08.09.2025 அன்று உச்ச நீதிமன்றத்தில் அசல் வழக்கினை விரைவில் விசாரிக்க கோரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் 02.02.2026 தேதியிட்ட தீர்ப்பில், பெண்ணையாறு பிரச்சனையை தீர்ப்பதற்காக. ஒருமாத காலத்திற்குள் ஒரு நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
பெண்ணையாறு மற்றும் அதன் கிளை நதியான மார்கண்டேயா நதி குறித்த பிரச்சனைகளை தீர்க்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வந்துள்ளதன் விளைவாக உச்சநீதி மன்றத்தில் 02.02.2026 தேதியிட்ட நல்ல தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய அரசு நிறைவேற்றுமென தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனடியாக அமைக்குமென எதிர்பார்க்கிறேன்.
மேலும், இப்பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து விரைவில் பெண்ணையாறு மற்றும் மார்கண்டேயா நதிநீரை பெற்று, குடிநீர் மற்றும் வேளாண்மை தேவைகளுக்காக நம்பியுள்ள மக்களின் நலன்களை பாதுகாக்கும்''; என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister Duraimurugan said that a favorable verdict has been obtained as a result of the efforts made by the government in the Pennaiyar river issue