சொந்த அரசையே விமர்சித்த காங்கிரஸ் துணை முதல்வர்; வீட்டிற்கே சென்று சந்தித்த ஜே.பி.நட்டா; இமாச்சல் அரசியலில் பரபரப்பு..!
JP Nadda met with the Congress Deputy Chief Minister in Himachal Pradesh
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு மண்டி நகரில் நேற்று விழா நடைபெற்றது. நிகழ்வில் கலந்துக்கொண்ட அம்மாநில துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மேடையில் ஆவேசமாகப் பேசியதோடு, அதிகாரிகளை எச்சரிக்கும் வகையிலும், சொந்தக் கட்சித் தலைமையிலான அரசையே மறைமுகமாக விமர்சிக்கும் தோணியிலும் பேசியிருந்தார்.
அதிலும் குறிப்பாக, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு நிர்வாகம் தொடர்பாகக் கடும் செய்தி விடுக்கும் வகையில் அவர் பேசியது ஆளும் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிம்லா சென்றுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, இமாச்சல பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து ஆளும் கட்சிக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். தற்போது அரசியல் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற துணை முதல்வரின் இல்லத் திருமண விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பங்கேற்க முடியாததால், நல்லெண்ண அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆளும் கட்சிக்குள் மோதல் போக்கு நிலவுகின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வரைச் சந்தித்திருப்பது அம்மாநில அரசியலில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.
English Summary
JP Nadda met with the Congress Deputy Chief Minister in Himachal Pradesh