ஏழைகள் வாழனுமா?.. எல்லாத்தையும் கேன்சல் பண்ணுங்க.... கொந்தளிப்புடன் தமிழக முதல்வருக்கு கண்ணீர் கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள்  "இ-பாஸ் நடைமுறை - ஞாயிற்றுக் கிழமை முழுஊரடங்கு ஆகியவற்றை கைவிட வேண்டுமெனவும், நிபந்தனைகளுடன் பொதுப்போக்குவரத்தை படிப்படியாக அமலாக்க வேண்டுமெனவும்" வலியுறுத்தி இன்று (5.8.2020) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இக்கடிதத்தில், " தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு ஆகிய நான்கு காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது.

தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் சிக்கித் தவிப்பவர்கள், பணி நிமித்தமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்ற வியாபாரிகள், தினக்கூலி உழைப்பாளிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். 

அதேபோல் சொந்த ஊர்களில் உள்ள வயதான, சிகிச்சை பெறும் பெற்றோரை, அவ்வப்போது சென்று கவனிக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இறுதிச் சடங்குகளுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றால், இறப்புச் சான்று கட்டாயம் என்று உள்ளது. துக்க வீடுகளில் உள்ளவர்கள் உடனடியாக இறப்புச் சான்று பெற்று அனுப்பி வைக்க இயலாது. 

இதனால் பலர் துக்க நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய, நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அத்தகைய காரணங்களுக்காக பயணிக்க இ-பாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் தவிக்கின்றனர். மேலும் ஒருமுறை ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், பிறகு அந்த எண்ணைக் கொண்டு, சரியான ஆவணங்களுடன் எத்தனை முறை விண்ணப்பித்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகின்றன என செய்திகள் வருகின்றன.

அதேநேரத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஆவணம் இல்லாவிட்டாலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஏழை, நடுத்தரமக்கள் நியாயமான காரணங்களுக்கு ஆவணத்துடன் விண்ணப்பித்தாலும் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதில் ஊழல் - முறைகேடுகள் நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், பரவாமல் தடுப்பதற்கும் தேவையான மாற்று வழிகளையும் கையாள வேண்டுமெனவும், மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை கைவிட வேண்டும். ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என்ற நிலையால், சனிக்கிழமைகளில் அதிகப்படியான மக்கள் பொருட்களை வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர். மக்கள் கூட்டமாக கூடும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றாமலும் இருப்பதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், அனைவரும் முகக் கவசம் அணியவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தளர்த்த வேண்டுமெனவும்; பிற நாட்களில் கடைபிடிக்கப்படும் விதிகளையே ஞாயிற்றுக் கிழமையும் அமலாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

நிபந்தனைகளுடன் பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிட வேண்டும். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தினக்கூலி தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

மேலும் சாதாரண ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் தங்களது அவசியத் தேவைகளுக்காக நகரங்களுக்கோ அல்லது வெளியூர் செல்வதற்கோ பொதுப்போக்குவரத்து இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சொந்தமாக இருசக்கர வாகனம் இல்லாத பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். அதுபோல் தற்போது மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கு பொதுப் போக்குவரத்து இல்லாமல் அதிக கட்டணத்திற்கு தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்த வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறு வியாபாரிகள், வணிகர்கள் நகரங்களுக்கு சென்று பொருட்களை வாங்க முடியாத நிலையும், விவசாயிகள் விவசாயப் பொருட்களை நகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்க முடியாத நிலையும் உள்ளது.

எனவே, கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதுடன், சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு சில நிபந்தனைகளுக்குட்பட்டு படிப்படியாக பொதுப் போக்குவரத்தை துவக்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM K Balakrishnan request to TN Govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->