5 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை... டி.எஸ்.பி-யை விசாரணை அதிகாரியாக நியமித்து மதுரை ஐகோர்ட் அதிரடி...!
DNA Testing 5 Individuals Madurai High Court Takes Decisive Action Appointing DSP Investigating Officer
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், இவ்வழக்கைக் கண்காணிக்கப் புதிய விசாரணை அதிகாரியை நியமித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக முறையான விசாரணை நடத்தவும், குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி வக்கீல் மாரீஸ்வரி தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், சந்தேகத்திற்குரிய 5 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டபோது, அழுத்தம் கொடுத்தால் சம்பந்தமில்லாத நபர்கள் கைதாக வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பின்னர், இந்த வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி சுந்தரபாண்டியனைப் புலனாய்வு அதிகாரியாக நியமித்த நீதிபதிகள், மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்களின் வாக்குமூலங்களை வீடியோ மற்றும் ஆடியோவாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், நீதிமன்றமே இந்த வழக்கை இனித் தீவிரமாகக் கண்காணிக்கும் என்றும் உறுதியளித்தது.
English Summary
DNA Testing 5 Individuals Madurai High Court Takes Decisive Action Appointing DSP Investigating Officer