படப்பிடிப்பில் ராம் சரணுக்கு தசைநார் கிழிவு; கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை..!
Ram Charan undergoes surgery at a famous private hospital in Coimbatore for a torn ligament during filming
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். சமீபத்தில் இவர் நடித்த 'பெத்தி' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற சண்டைக் காட்சி ஒன்றில் ராம்சரண் பங்கேற்று நடித்தார். அப்போது அவருக்கு இடதுகை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
படத்தின் இறுதிகட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ராம்சரண் உடனடியாக பெரிய அளவிலான சிகிச்சை மேற்கொள்ளாமல் தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தார். அதன்பின்னர் 'பெத்தி' படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டன.
அதனை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்ததில், ராம்சரணுக்கு இடதுகை மணிக்கட்டில் தசைநார் கிழிவு மற்றும் லேசான எலும்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தசைநார் முழுமையாக கிழிந்துள்ளதால், உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான கங்காவில் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. நிபுணர்கள் அடங்கிய குழுவினர், இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.
சிகிச்சையின்போது அவரது தந்தை சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோர் மருத்துவமனையில் உடனிருந்து அவரைப் பார்த்துக்கொண்டனர். அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்குச் சில வாரங்கள் ஓய்வு எடுக்கப் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், மருத்துவர்களின் முறையான அனுமதிக்குப் பிறகே அவர் அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
English Summary
Ram Charan undergoes surgery at a famous private hospital in Coimbatore for a torn ligament during filming