சுயசரிதையை எழுதி வரும் ரஜினிகாந்த்! அடுத்ததாக வாழ்க்கை வரலாறு திரைப்படமா? வெளியான புதிய தகவல்
Rajinikanth is writing his autobiography Will a biopic be next New details reveale
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது அவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், ரஜினிகாந்தின் சுயசரிதை குறித்து புதிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது திரைப்பயணத்தில் ஏராளமான வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் வலுவான வெற்றியுடன் மீண்டு வந்தவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
நீண்ட காலமாகவே, தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுத வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், தனது குருநாதர் கே. பாலசந்தர் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து கேட்டபோது, "சுயசரிதை என்றால் உண்மைகளை மட்டுமே எழுத வேண்டும். அதனால் நான் சுயசரிதை எழுத மாட்டேன்" என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அவரது வாழ்க்கை வரலாறு உலக அளவில் கவனம் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, ரஜினிகாந்தின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், திரையுலக அனுபவங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த சுயசரிதையில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், அந்த சுயசரிதையை திரைப்படமாக உருவாக்கும் சாத்தியக்கூறு குறித்தும் ரஜினிகாந்த் தனது நெருங்கிய வட்டாரத்தினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று அவரது நெருங்கியவர்கள் உற்சாகம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானால், அவரின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளது.
ரஜினிகாந்தின் சுயசரிதை மற்றும் அது திரைப்படமாக உருவாகும் வாய்ப்பு குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகவும் திரையுலகம் காத்திருக்கிறது.
English Summary
Rajinikanth is writing his autobiography Will a biopic be next New details reveale