நடிகர் சுஷாந்த் சிங் மேனேஜர் மரண வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின் புதிய திருப்பம்; வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ; பிரபலங்களிடம் விசாரணை..?
CBI registers case six years after the death of actor Sushant Singhs manager
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 08ஆம் தேதி, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சாலியன் கட்டிடத்தின் 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் மும்பையை மட்டுமல்ல ஒட்டுமொத்த பாலிவூட்டையும் அதிரவைத்தது.
திஷாவின் மரணம் நிகழ்ந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 14-ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார்.அடுத்தடுத்து நெருக்கமானவர்கள் உயிரிழந்ததால் நாடு பாலிவூட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திஷா சலியன் மரணம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்திய மும்பை போலீசார், அவர் கட்டிடத்தின் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக முடிவு செய்தனர். அவரது மரணம் தொடர்பாக விபத்து மரண அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
நாட்கள் கடந்து சென்ற நிலையில் மீண்டும் இந்த வழக்கில் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதன் பின்னர் மகாராஷ்டிர அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. ஆனால், திஷாவின் மரணத்தில் சதி இருப்பதாக கூறியவர்கள் மற்றும் அதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் விசாரணைக்கு நேரில் வந்து வாக்குமூலம் அளிக்கவில்லை என்ற நிலையில், விசாரணை பெரிதாக முன்னேறவில்லை
.
இதற்கிடையே, திஷாவின் தந்தை சதீஷ் சலியன், தனது மகளின் மரணம் தற்கொலை அல்ல என்றும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். இது பேசும் பொருளானது.
அத்துடன், திஷாவின் மரணத்துக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும், இரண்டும் ஒரு பெரிய சதியின் பகுதியாக இருக்கலாம் என்றும் சதீஷ் சலியன் சந்தேகம் எழுப்பினார். இதையடுத்து 2025-ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகிய சதீஷ் சலியன், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், தனது மகளின் மரணம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார்.
அதன்படி, அவரின் புகாரில், ஆதித்ய தாக்கரே, டினோ மோரியா, சூரஜ் பஞ்சோலி, ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றன. மேலும் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த புகார் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செப்டம்பர் 02-ஆம் தேதி திஷாவின் தந்தை தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது வழக்கை CBI விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

கடந்த 06 ஆண்டுகளாக நடந்த மும்பை போலீஸ் விசாரணையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, சந்தேகத்துக்குரிய மரணம் தொடர்பாக பல ஆண்டுகள் விசாரணை நடந்தும் FIR பதிவு செய்யப்படாதது கேள்விக்குள்ளானது.
அத்துடன், திஷாவின் குடும்பத்தினருக்கு உடற்கூராய்வு அறிக்கை மற்றும் விபத்து மரணப் பதிவு தொடர்பான ஆவணங்கள் நீண்ட காலமாக வழங்கப்படாததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி, கவனத்தில் கொண்டு வந்தது.
இதையடுத்து இந்த மரண வழக்கின் அனைத்து அம்சங்களையும் மீண்டும் விசாரிக்க CBIக்கு உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து சில நாட்களிலேயே திஷாவின் தந்தை சதீஷ் சாலியனிடம் CBI வாக்குமூலமும் பெற்றது. வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்ட பெயர்கள், விசாரணையின் முக்கிய பகுதியாக மாறின.
இந்நிலையில் செப்டம்பர் 14-ஆம் தேதி CBI இந்த வழக்கில் FIR பதிவு செய்துள்ளது. ஆதித்ய தாக்கரே, டினோ மோரியா, சூரஜ் பஞ்சோலி, ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோரின் பங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக FIR-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேப்போன்று திஷாவின் மரணத்தின் போது அதிகாரத்தில் இருந்தவர்கள், போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிபிஐ-யின் இந்த எஃப் ஐஆர் மூலம் திஷா சாலியன் மரணத்தின் பின்னணி மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
CBI registers case six years after the death of actor Sushant Singhs manager