சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு...! விநியோகம் 10% குறைப்பால் பால் முகவர்கள் திண்டாட்டம்...!
Aavin milk shortage Chennai Milk agents distress due to 10 percentage reduction supply
தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் திட்டமிட்டு குறைக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் மட்டும் இன்று முதல் மேலும் 10 சதவீதம் அளவுக்கு விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான பாலை வழங்க முடியாமல் பால் முகவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை தமிழக அரசு கடந்த வாரம் லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தியுள்ளது.

ஆனால், அதற்கேற்ப விற்பனை விலையை உயர்த்தாமல் இருப்பதால், ஆவின் நிறுவனத்தின் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.கொள்முதல் விலை உயர்த்தப்பட்டபோதிலும் ஆவினுக்கு வரும் பாலின் அளவு அதிகரிக்கவில்லை. இதனால் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடம் இருந்து கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், வடமாநிலங்களில் இருந்து வாங்கப்படும் வெண்ணெய் மற்றும் பால் பவுடரை பயன்படுத்தி பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் நிலையும் தொடர்கிறது.இந்த நிதிச்சுமையை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தை குறைக்க நிர்வாக இயக்குநரும், மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்களும் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆவின் பாலுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு, அரசுக்கு அவப்பெயர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சில வாரங்களுக்கு முன்பே முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆவின் பால் விநியோகம் ஏற்கனவே கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் தேவைக்கேற்ப பால் பாக்கெட்டுகளை வழங்க முடியாமல் பால் முகவர்கள் திணறி வருகின்றனர்.
குறைந்த வருவாயில் தொழிலை நடத்தி வரும் பால் முகவர்கள், விநியோக வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, பணியாளர்களின் சம்பளம், கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளைக்கூட சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சென்னை பெருநகரில் தினமும் சுமார் 16.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த 6 மாதங்களில் மட்டும் பால் முகவர்களுக்கான ஆவின் பால் விநியோகம் 25 சதவீதத்துக்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், இன்று 15-ந்தேதி முதல் சென்னை பெருநகரில் ஆவின் பால் விநியோகத்தை மேலும் 10 சதவீதம் வரை குறைக்க நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை முழுவதும் பொதுமக்களின் தேவைக்கேற்ப ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆவின் நிறுவனத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு ஆலோசனைகளுடன் பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமியை கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து தரவுகளுடன் எடுத்துரைத்ததாகவும், முதல்-அமைச்சருக்கும் பலமுறை மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கைகள் அனுப்பியதாகவும் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரை ஆவினை மீட்டெடுப்பதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவது பால் முகவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியிழப்பை சந்தித்தாலும், அது மாநில அரசின் நிதிப் பங்களிப்புடன் இயங்கும் கூட்டுறவு நிறுவனம் என்பதால் அந்த இழப்பு வேறு வழிகளில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நிலை உருவாகலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.அதேநேரத்தில், ஆவினின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் தனியார் பால் நிறுவனங்களும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் நிறுவனங்கள் தங்களது விற்பனை விலையையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.19 முதல் ரூ.24 வரை வித்தியாசம் இருப்பதாகவும், தனியார் பால் விலை மேலும் உயர்ந்தால் பொதுமக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் ஆவின் பாலை அதிகம் நாடும் நிலை உருவாகும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், தற்போதே ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பொதுமக்களின் தேவை மேலும் அதிகரித்தால் தட்டுப்பாடு தீவிரமடைந்து, புதிய அரசுக்கு தேவையற்ற அவப்பெயர் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினை பாதுகாப்பதுடன், பொதுமக்களுக்கு தடையின்றி பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆவின் பால் விற்பனை விலையையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விற்பனை விலையை உயர்த்தினால் பொதுமக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதற்காக முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதைவிட, ஆவினின் நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமுல் மற்றும் நந்தினி போன்ற கூட்டுறவு நிறுவனங்களைப் போன்று அரசியல் தலையீடு இல்லாமல், சுயசார்புடன் செயல்படும் வகையில் ஆவின் நிறுவனத்துக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்றும், தட்டுப்பாடின்றி பால் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி மற்றும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Aavin milk shortage Chennai Milk agents distress due to 10 percentage reduction supply