வகுப்பறையா... சித்திரவதைக் கூடமா...? - ஆசிரியை வெளுத்து வாங்கியதில் 10 மாணவிகளுக்குக் காயம்... பள்ளியில் குவியும் பெற்றோர்...!
teacher hit 10 students injured by stick Parents felt very bad and hurry to school
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்த ஆசிரியையான தேன்மரியசுகந்தி (44), சிறப்பு வகுப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சத்தத்தால் ஆத்திரமடைந்து, அருகில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் பயின்ற வகுப்பறைக்குச் சென்று மாணவ, மாணவிகளை பிரம்பால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பவித்ரா, சுஜித்ரா, சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தனமுத்துமாரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கைகளில் கடுமையான காயங்களும் வீக்கமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.பாதிக்கப்பட்ட மாணவிகளில் பவித்ரா மற்றும் சுஜித்ரா வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
காயம் தீவிரமாக இருந்ததால் பவித்ரா மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மூன்று நாட்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில் சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தனமுத்துமாரி உள்ளிட்ட மாணவிகள் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் கைகளில் இன்னும் வீக்கம் நீங்காததால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாக பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக மாணவி பவித்ராவின் தாயார் ராஜாத்தி வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆசிரியையான தேன்மரியசுகந்தி மீது பி.என்.எஸ். சட்டம் பிரிவு 115(2) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, ராஜாத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, தனது மகள் உட்பட பல மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் தாக்கியதால் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் தனது மகளால் இடைப்பருவத் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை உருவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியை மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த சம்பவம் கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
teacher hit 10 students injured by stick Parents felt very bad and hurry to school