திரைப்பட முன்பணம் விவகாரம்: நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


திரைப்படத் தயாரிப்புக்காக முன்பணம் பெற்ற விவகாரத்தில், தன் மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கிலிருந்து பாதுகாப்புக் கோரி பிரபல நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண் (இயற்பெயர்: முகைதீன் அப்துல் காதர்) தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:

கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில், மீஞ்சூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சரவணன் என்பவர் படம் தயாரிப்பதாகக் கூறி தமக்கு ₹50,000 முன்பணமாக அளித்ததாக ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். ஆனால், தயாரிப்புப் பணிகள் தொடங்காத சூழலில், தான் ₹50 லட்சம் கொடுத்ததாகக் கூறி அதைத் திருப்பித் தருமாறு சரவணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், 2025 ஆகஸ்ட் மாதத்தில் ₹10 லட்சத்தைச் சரவணனிடம் ராஜ்கிரண் திரும்ப வழங்கியுள்ளார். இருப்பினும், மீதமுள்ள ₹40 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகச் சரவணன் அளித்த புகாரின் பேரில், பொன்னேரி நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி மீஞ்சூர் போலிசார் ராஜ்கிரண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ராஜ்கிரணின் வாதம்:

இதையடுத்து முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜ்கிரண் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2022-இல் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இரு தரப்பினருக்கு இடையே உள்ள தொழில் சார்ந்த சிவில் ஒப்பந்தப் பிரச்சினை ஆகும். இதற்குத் தேவையின்றி கிரிமினல் சாயம் பூசப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகத் திரையுலகில் இருக்கும் நான் தலைமறைவாக மாட்டேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவு:

இம்மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், நிபந்தனையாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Rajkiran Granted Anticipatory Bail by Madras High Court in Movie Advance Dispute


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->