தமிழக அரசு ஊழியர்களே அலர்ட்...! ஆகஸ்ட் 31 வரை உங்களுக்கு இடமாற்றம் கிடையாது...! - வெளியான முக்கிய அரசாணை
Tamil Nadu government employees alert You not transferred until August 31 Important government order issued
தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் எந்தவித தடங்கலும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிட மாற்றங்களுக்கு ஆகஸ்டு 31-ந்தேதி வரை தற்காலிக தடை விதித்து தமிழக அரசு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக, சுய கணக்கெடுப்பு, வீடுகளின் பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டுவசதி தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் தமிழ்நாட்டில் வருகிற 17-ந்தேதி முதல் தொடங்குகின்றன.
இந்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் தாமதம் மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், கணக்கெடுப்பு பணி நிறைவடையும் வரை தேவையற்ற பணியிட மாற்றங்களை தவிர்க்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
அந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் திட்டமிட்டபடி சீராகவும், துல்லியமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், நாளை முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிட மாற்றங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளில் எந்தவித நிர்வாக தடங்கலும் ஏற்படாத வகையில் அனைத்து அரசு துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, பணிகளை முழு ஒருங்கிணைப்புடன் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government employees alert You not transferred until August 31 Important government order issued