வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள டாஸ்மாக் அலுவலக சோதனை வழக்கு: அமலாக்கத்துறைக்கு விதித்த தடை உத்தரவு தொடரும் என்கிறது உச்சநீதிமன்றம்..!
Supreme Court says stay on Enforcement Directorate in TASMAC office raid case will continue
டாஸ்மாக் அலுவலக சோதனை வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையை தொடர்வதாக அறிவித்த வழக்கின் விசாரணை வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் 06-ஆம் தேதி முதல் 08-ஆம் தேதி வரை, தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) தலைமை அலுவலகம் உட்பட சுமார் 20 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
அதில் டாஸ்மாக் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டு இருந்தனர். அதாவது, மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை முறைகேடாக வசூலித்தமை, மதுபான ஆலைகளுடன் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருந்தமை, கொள்முதலைக் குறைத்துக் காட்டியமை, பணியிட மாற்றம் மற்றும் பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கே டாஸ்மாக் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை தனது அறிக்கையில் கூறியிருந்தது.
ஆனால், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாகத் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்படி, குறித்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் என்பது தேச நலனுக்கு எதிரானது என்றும், 2017 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பதியப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாகவும் கூறியிருந்தது. அத்துடன், அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

குறித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இணைந்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த மே 22-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததுடன், டாஸ்மாக் அலுவலக சோதனை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு வரும் 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால், அதனை ஒத்திவைக்காமல் அதே தேதியில் விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Supreme Court says stay on Enforcement Directorate in TASMAC office raid case will continue