ஒரு பக்கம் மிரட்டல்; மறுபக்கம் தண்ணீர் திறந்துவிடும்படி இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!
Pakistan begs India to release water
கடந்த ஏப்ரல் 22-இல் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நம் படைகள் அழித்தன. அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்து அதிரடி காட்டியது.
அத்துடன், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் வகையில் சிந்து நதி குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவ தளபதி, அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஆகியோர் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக போர் மிரட்டல் விடுத்த வருகின்றனர். மறுபுறம் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் இருந்து நீரை வழங்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறது.
1960-இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே, சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆறு நதிகளை உள்ளடக்கி இந்த ஒப்பந்தமானது கிழக்கு நதிகள் மற்றும் மேற்கு நதிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு நதிகளில் சட்லஜ், பியாஸ், ராவி ஆகியவை உள்ளன. இந்த மூன்று நதிகளின் நீரின் உரிமையும் முழுமையாக இந்தியா வசம் உள்ளது. மேற்கு நதிகளில் சிந்து, ஜீலம், செனாப் உள்ளன. சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கிடைத்து வந்தது.

மேற்கு நதிகளின் நீரை நம்பி தான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் உள்ள நிலையில், லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடிநீர் ஆகியவற்றுக்கு சிந்து, செனாப், ஜீலம் நதிகளின் நீரை அந்நாடு பயன்படுத்தி வந்தது. தற்போது இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை. தொடர்ந்து, இந்தியா புதிய அணை கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, 'அணை கட்டினால் தகர்ப்போம்' என நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். இதே போல் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அஅமைச்சரான பிலவல் புட்டோவும், 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தால், எங்களுக்கு போரை தவிர வேறு வழியில்லை' என, மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படி இந்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம். சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மேற்கு நதிகளின் கீழ் பகுதியில் பாகிஸ்தான் இருப்பதால், அந்த நதிகளில் எங்களுக்கே உரிமை அதிகம் என சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த நதியில், நீர்மின் திட்டங்களை ஒருதலைப்பட்சமாக செயல்படுத்தக் கூடாது என்றும், சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம், ஆகஸ்ட் 08-இல் கூறியுள்ளது.
பாகிஸ்தான் பகுதிகளுக்கு நீர் பாய இந்தியா அனுமதிக்க வேண்டும் எனவும் மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி நீரை திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தின் வழக்கு நடைமுறைகளையோ அல்லது தீர்ப்புகளையோ இந்தியா ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan begs India to release water