தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகள்: உடனடியாக விடுதலை செய்யவேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
Supreme Court orders immediate release of life prisoners who have completed their sentences
ஆயுள் தண்டனை பெற்றுவந்த கைதிகள், நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள் வரை தண்டனையை அனுபவித்து விட்டால், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உ.பி-இல் வசித்து வந்தவர் தொழிலதிபரான நிதிஷ் கட்டாரா கடந்த 2002-ஆம் ஆண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று படுகொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலைக்கான முழு பின்னணியும் தெரிய வந்தது.
அதாவது, அப்போது உ.பி.,யின் கேபினட் அமைச்சராக இருந்த டி.பி.யாதவ்வின் மகள் பார்தி யாதவை, தொழிலதிபரான நிதிஷ் கட்டாரா காதலித்துள்ளார். இருவரும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், டி.பி.யாதவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இதன்காரணமாக, நிதிஷ் கட்டாரா மீது ஆத்திரமடைந்த டி.பி.யாதவின் மகன் விகாஷ் யாதவ், அவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டு, அதன்படி தன் உறவினரான விஷால் மற்றும் பெஹல்வான் என்ற சுக்தேவ் யாதவ் ஆகியோரது துணையுடன் நிதிஷ் கட்டாராவை கடத்திச் சென்று, விகாஷ் யாதவ் படுகொலை செய்தார்.
இந்த வழக்கில், முதல் குற்றவாளியான அப்போதைய கேபினட் அமைச்சர் டி.பி.யாதவின் மகன் விகாஷ் மற்றும் விஷாலுக்கு 25 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த பெஹல்வானுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தண்டனை குறைப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், மூன்று வாரங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெஹல்வான் கடந்த ஆண்டு நவம்பரில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அவருடைய மனுவில், அவர் 20 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவித்து வந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து, தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு ஜாமினில் விடுவிக்க கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணை வந்தது.
குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அதன் பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
நிதிஷ் கட்டாரா கொலை வழக்கில் 20 ஆண்டுகள் வரை, தண்டனை குறைப்பு உள்ளிட்ட எந்த சலுகையும் இல்லாமல் முழுமையாக தண்டனையை அனுபவித்து விட்டதால், பெஹல்வானை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைதியின் தண்டனை காலம் கடந்த மார்ச் 09-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விடுதலை செய்யாமல் மேற்கொண்டு சிறையிலேயே அடைத்து வைப்பது சட்டவிரோதமாகும் என்றும், இந்த நடைமுறை தொடர்ந்தால், ஒவ்வொரு கைதியும் சிறையிலேயே உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கு சம்பந்தப்பட்ட கைதி 20 ஆண்டுகள் என்ற முழு தண்டனை காலத்தையும் அனுபவித்து இருப்பதால், இனி தண்டனை குறைப்புக்கு உத்தரவிட வேண்டிய அவசியமும் இல்லை எட்ன்றும் அறிவித்துள்ளனர்.
அத்துடன், நாடு முழுதும் தண்டனை காலம் முடிந்தும் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பவும் அறிவுறுத்துகிறோம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Supreme Court orders immediate release of life prisoners who have completed their sentences