சென்னை: பேனா மை சிந்தியதற்காக சிறுமியை தலையில் அடித்து ரத்த... செல்வப்பெருந்தகை கண்டனம்!
congress selvaperunthagai condemn to chennai school girl attack
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மனித நேயத்தையும், கல்வி நிலையங்களின் அடிப்படை ஒழுங்கையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பேனா மை சிந்தியதற்காக ஒரு ஐந்தாம் வகுப்பு சிறுமியை தலையில் அடித்து ரத்தக் கசிவுடன் காயமடைந்து 20 நாட்களாக சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிய செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
குழந்தைகள் கல்வி பெறும் இடம் என்றால் அது அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த ஆலயம் ஆக இருக்க வேண்டும். ஆனால், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரே இத்தகைய கொடுமையான செயல் செய்திருப்பது நம் சமூகத்தின் கல்வி பண்பை களங்கப்படுத்துகிறது.
இதுபோன்ற செயல் எவ்விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும். குறித்த தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும். அதேசமயம், கல்வித்துறை அதிகாரிகள் இச்சம்பவத்தை முழுமையாக விசாரித்து, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு கடுமையான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். அந்த சிறுமிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, மனநலம் சார்ந்த ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு, குற்றவாளி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
congress selvaperunthagai condemn to chennai school girl attack