'தமிழக அரசியலில் திருச்சி மக்களின் தீர்ப்பு மாற்றத்தின் தொடக்கமாக அமையும்'; நயினார் நாகேந்திரன் உறுதி..!
Nainar Nagendran says that the verdict of the people of Trichy in Tamil Nadu politics will be the beginning of a change
2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி. தமிழக அரசியலில் திருச்சி மக்களின் தீர்ப்பு மாற்றத்தின் தொடக்கமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''காவிரி தாயின் கரையில் நாகரிகமும் ஆன்மிகமும் அரசியலும் கலந்து, தமிழ் பண்பாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பெருமைமிகு திருச்சி மண்ணில், வரலாறும் வளர்ச்சியும் கைகோர்த்து நிற்கும் இந்த நகரத்தில், இன்று நம் தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம் யாத்திரை சிறப்பாக நடைபெற்றது.
மத்திய தமிழகத்தின் இதயமாக விளங்கும் திருச்சி,வடக்கும் தெற்கும், கிழக்கும் மேற்கும் இணைக்கும் முக்கிய வர்த்தக, போக்குவரத்து மையமாகவும்,கல்வி, தொழில், விவசாயம், வணிகம் ஆகிய துறைகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக இருந்து வருகிறது.

ஆனால் இத்தனை வரலாற்றுப் பெருமையும்,பொருளாதார மற்றும் நிர்வாகமுக்கியத்துவமும் கொண்ட இந்த திருச்சி மாவட்டத்தில்,விடியா திமுக அரசு மக்களின் அடிப்படை தேவைகளில் உரிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
காவிரி நீரை சார்ந்த குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படாததால் திருச்சி மாநகரப் பகுதிகளிலும், புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல பகுதிகளில் சாலை வசதிகள் மோசமான நிலையில் இருந்து, துளைதுளையாகிய சாலைகள் விபத்துகளுக்குக் காரணமாகி வருகின்றன.
முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைக்காலங்களில் திருச்சி நகரமே தண்ணீரில் மூழ்கி,
வணிகம், போக்குவரத்து, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.
வேலைவாய்ப்பின்மை, அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர், உபகரணங்கள்,
மருந்துகள் இல்லாத அவலம் இவை அனைத்தும் திருச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாகவே உள்ளது. கல்வி நகரமாக பெயர் பெற்ற திருச்சியில் கூட அரசு கல்வி நிறுவனங்கள் தேவையான அளவு மேம்படுத்தப்படாமல், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
இதற்கான தக்க பதிலடியை, 2026 சட்டமன்றத் தேர்தலில், திருச்சி மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி. தமிழக அரசியலில் திருச்சி மக்களின் தீர்ப்பு மாற்றத்தின் தொடக்கமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்கள், பாஜக திருச்சி நகர் மாவட்டத் தலைவர் திரு. K K ஒண்டிமுத்து அவர்கள், மாநில இணைப் பொருளாளர் திரு. சிவசுப்பிரமணியன் அவர்கள், பாஜக டிஜிட்டல் நூலக தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசீர்வாதம் ஆச்சாரி அவர்கள், அஇஅதிமுகவிலிருந்து திருச்சி மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் துணை மேயர் திரு. J சீனிவாசன் அவர்கள், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் திரு. M பரஞ்சோதி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் திரு. P குமார் அவர்கள், கட்சி அமைப்பு செயலாளர் திருமதி. S. வளர்மதி அவர்கள், கட்சி அமைப்பு செயலாளர் திரு. ரத்தினவேல் அவர்கள், முன்னாள் மாநகர மன்ற உறுப்பினர் திரு. மனோகரன் அவர்கள், மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
English Summary
Nainar Nagendran says that the verdict of the people of Trichy in Tamil Nadu politics will be the beginning of a change