பிராமணர்கள் குறித்து அவதூறு; யோகி ஆதித்யநாத் உத்தரவில் 'Ghooskhor Pandat' படக்குழுவினர் மீது FIR பதிவு..!
Following Yogi Adityanaths order an FIR has been registered against the Ghooskhor Pandat film crew
இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கத்தில், நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் Ghooskhor Pandat என்ற படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட நிலையில், படத்தில் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதாவது, 'கூஸ்கோர்' என்றால் லஞ்சம் வாங்குபவர், 'பண்டட்' என்பது பிரமாணரை குறிக்கும் சொல் என்பதால் தலைப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுதோஷ் துபே, நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதேபோன்று, டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம். அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாகும், என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'கூஸ்கோர் பண்டட்' (Ghooskhor Pandat) ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, உத்தரப் பிரதேச காவல்துறை, படக்குழுவினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் படக் குழுவினர் மீது லக்னோ காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பிராமண சமூகத்தை ஊழல்வாதிகளாகக் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 'பண்டட்' என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் புனைபெயர் மட்டுமே என்றும், எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
இருப்பினும், மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸை அடுத்து, நெட்பிளிக்ஸ் நிறுவனம், 'கூஸ்கோர் பண்டட்' படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
English Summary
Following Yogi Adityanaths order an FIR has been registered against the Ghooskhor Pandat film crew