இந்தியா சாதனை; அணுஆயுதங்ககளை சுமந்து, 3000 கி.மீ. பாய்ந்து தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனையில் வெற்றி..!
Agni 3 missile test successful
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் ராணுவம் இணைந்து நடத்திய, தரை விட்டு தரை பாயும் அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவிலுள்ள சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து இன்று (பிப்ரவரி 06) இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளும் வெற்றிகரமாக செயல்பட்டன எனவும், ஏவுகணை அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த அக்னி-3 ஏவுகணை, சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. சுமார் 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த அக்னி-3 ஏவுகணையின் முந்தைய பதிப்புகளான, அக்னி-1 ஏவுகணை 700 கிமீ வரையும், அக்னி-2 ஏவுகணை 2,000 கிமீ வரையும் பாய்ந்து தாக்கக் கூடிய தன்மை வாய்ந்தது.
English Summary
Agni 3 missile test successful