கமல்ஹாசனின் சாதனையை 05 வயதில் முறியடித்துள்ள த்ரிஷா தோசர்; யார் இவர்..?
Trisha Dosar has broken Kamal Haasans record at the age of five
கடந்த ஆண்டு டெல்லியில் 71-வது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்றது. அப்போது ஷாருக்கான் 'ஜவான்' படத்துக்காக தேசிய விருதை வென்றார். அவருடன் '12த் ஃபெயில்' படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி விருதை பகிர்ந்துகொண்டார். இதில் ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
அதேப்போன்று தமிழில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான 'பார்க்கிங்' படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது எம்.எஸ்.பாஸ்கருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரையுலகின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த தேசிய விருது விழாவில் 05 வயதான குழந்தை நட்சத்திரம் த்ரிஷா தோசர். சுட்டிக் குழந்தையான இவர் சேலையை கட்டிக்கொண்டு வந்து மேடையில் குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
மராத்தியில் வெளியான 'Naal 2' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை த்ரிஷா தோசர் பெற்றுள்ளார். குழந்தைகளை மையப்படுத்திய இந்தப் படத்தில் சிமி என்ற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வெறும் 3 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக மராத்தியில் ஒளிபரப்பாகும், 'ஐ துல்ஜா பவானி' என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். தொடர்ந்து மராத்தி சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் மகேஷ் மஞ்சுரேக்கின் இயக்கத்தில் உருவான 'புன்ஹா சிவாஜி ராஜே போசலே' என்ற படம் த்ரிஷா நடிப்பில் வெளியானது.
இந்நிலையில், மிக குறைந்த வயதிலேயே தேசிய விருது பெற்றவர் என்ற பெருமையை த்ரிஷா தோசர் வென்றிருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கும்போது வயது 05. இதன் மூலம் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அப்போது சிறுமியை பாராட்டி வெளியிட்ட பதிவில், ''உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் முதல் தேசிய விருது வாங்கும்போது எனக்கு வயது 06. என்னுடைய சாதனையை நீங்கள் முறியடித்து விட்டீர்கள். இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது மேடம். தொடர்ந்து பணியாற்றுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.'' என குறிப்பிட்டு இருந்தார்.
English Summary
Trisha Dosar has broken Kamal Haasans record at the age of five