மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு; இன்னும் அதிகரிக்கலாம் என அச்சம்..!
The death toll in the Meghalaya coal mine explosion has risen to 25
நேற்று மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளமை நாட்டை உலுக்கியுள்ளது.
நேற்றுக்காலை சுமார் 11 மணியளவில் ஏற்பட்ட விபத்தின் போது 18 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 07 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக மேகாலயா டிஜிபி நோங்ராங் உறுதிப்படுத்தியுள்ளார்.
உம்சங்காட் கிராமத்தில் உள்ள தாங்ஸ்கு பகுதியில் இயங்கி வந்த இந்த சட்டவிரோத சுரங்கத்தில்,இந்த சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்தது. சுரங்கத்தில், டைனமைட் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி நிலக்கரி எடுக்கும்போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இதேநேரத்தில், சுரங்கத்திற்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது வரை 12 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் மற்றும் மாநில அரசின் சார்பில் தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விபத்தினையடுத்து, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்கமா, சட்டவிரோத சுரங்க உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நிலக்கரி சுரங்க உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 2014-ஆம் ஆண்டு முதல் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ள போதிலும், இதுபோன்ற சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The death toll in the Meghalaya coal mine explosion has risen to 25