சென்னையில் ரூ.300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு! இன்னும் 2000 கோடி ரூபாய் நிலம் இருக்கு முதல்வரே.. அறப்போர்!
Chennai Govt Land arappor iyakkam
சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்த தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து கட்டடத்தில் செயல்பட்ட சரவணபவன் ஹோட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், ஹோட்டலின் பெயர்ப் பலகையை அகற்றி கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த விவரத்தில் தொடர்ந்து புகார் அளித்துவரும் அறப்போர் இயக்கம் ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பரங்கிமலை கிராமத்தில் கீழ்கண்ட சர்வே எண்களில் உள்ள அரசு நிலங்களை வருவாய் துறை உடனடியாக மீட்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் முதல்வர் உள்பட பலருக்கு 21/11/2023 அன்று புகார் அனுப்பி இருந்தது. ரியல் எஸ்டேட் மாபியா பலர் இந்த நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளதை வெளிக்கொண்டு வந்தோம். புகார் அனுப்பிய ஒரு வாரத்திற்குள் பட் ரோட்டில் உள்ள சர்வே எண் 442இல் உள்ள 1.1 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. அரசு ரூ 500 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது என்று பெருமையுடன் சொன்னது. ஆனால் மற்ற சர்வே எண்களில் ஜே.சி.பி கொண்டு முன் பகுதியை மட்டும் பிராண்டி விட்டு சென்று விட்டது. தற்பொழுது அரசு தனக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்று இன்று சர்வே எண் 1467 சரவண பவன் இருந்த இடத்தையும் மீட்டு உள்ளனர். மகிழ்ச்சி.
முதல்வரே, அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய மகன்கள் நிறுவன பெயரில் இன்று இடித்த இடத்திற்கு அருகில் உள்ள சர்வே எண் 1353 இல் 4.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என்று அறப்போர் 22/10/2024 அன்று புகார் கொடுத்துள்ளது. இதை எப்பொழுது மீட்பீர்கள் என்று பொது மக்கள் கேட்கின்றனர். ஒரு ஏக்கர் நிலம் மீட்டாலே 300 கோடி, 500 கோடி என்று சொல்லும் அரசு 4.75 ஏக்கர் மீட்டால் 2000 கோடி ரூபாய் நிலத்தை மீட்டுள்ளது என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். முதல்வரே, நீங்கள் மீட்டீர்கள் என்றால் தன் அமைச்சரே ஆனாலும் 2000 கோடி நிலத்தை மீட்டுள்ள முதல்வர் என்பார்கள். இல்லை என்றால் உங்களுக்கு உங்கள் அமைச்சர் சொத்து சேர்ப்பது தான் முக்கியம் என்பார்கள். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் ?
மேலும் ரெமோ ஆக்கிரமித்துள்ள சர்வே எண் 1356 எப்பொழுது மீட்பீர்கள் என்றும் பொது மக்கள் கேட்கின்றனர். உயர்மட்டத்தில் எந்த சமரசமும் இல்லாமல் கீழ்கண்ட சர்வே எண்களில் உள்ள அனைத்து நிலங்களையும் தமிழ்நாடு அரசு மீட்க வேண்டும். அந்த ஒளித்து வைத்து இருக்கும் பரங்கிமலை வருவாய் துறை A ரிஜிஸ்டரையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். தப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Chennai Govt Land arappor iyakkam