பள்ளி மாணாக்கர்களுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி..மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்!
Summer Celebration Programme for School Students District Collector Asha Ajith inaugurated the event
சிவகங்கை மாவட்டம் 2025-26 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலவுள்ள பள்ளி மாணாக்கர்களுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியினை,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பள்ளி மாணாக்கர்களுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தொடங்கி வைத்து தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையில் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில் கல்வி மட்டுமன்றி, மாணாக்கர்களின் தனித்திறன்களை மேம்படுத்திடும் பொருட்டு, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தற்போது கோடை விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால், இக்கோடை விடுமுறையினை பள்ளி மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், அமைவதற்கென மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற திட்டமிடப்பட்டு, அதனடிப்படையில் இன்றையதினம் முதல் வருகின்ற 17.05.2025 வரை 15 நாட்கள் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சிறப்பான ஆசிரியர்களைக் கொண்டு மாணாக்கர்களுக்கு ஆங்கிலம் பேசுதல், கதை கூறுதல், போட்டோ சூட் வீடியோ உருவாக்குதல், செஸ், சுடோகு, ஓவியம் வரைதல், ரூபிக் கியூப், பனைவோலை கொண்டு வடிவங்கள் செய்தல், மண் கொண்டு கலைப்பொருட்கள் செய்தல், சிறார்களுக்கு திரைப்பட விமர்சனம் எழுதுதல், இசைப்பயிற்சி மற்றும் அன்றாட அறிவியல் சோதனைகள் போன்ற 12 வகையான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை மட்டும் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு, மீதமுள்ள நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மேற்கண்ட பயிற்சிகள் மாணாக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில், பெற்றோர்கள் தனி கவனம் செலுத்தி, குறிப்பிட்ட நேரத்தில் தங்களது குழந்தைகளை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள செய்தல் வேண்டும்.
இவ்வகையான பயிற்சிகள் மாணாக்கர்களுக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மேம்படுத்திடும் பொருட்டும், அவர்களின் மனநிலையை சீராக வைத்து, மனமகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கும், புதிதாக கற்றுக்கொள்வதற்கும் இக்கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி அடிப்படையாக அமையும். இக்கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் பயன்பெறும் வகையில் 250க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தற்போது பதிவு செய்துள்ளனர். விருப்பமுள்ள மாணவர்களும் நேரடியாக வருகை தந்து பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம். சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியை போன்று, காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியிலும் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இன்றையதினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.பொன்.விஜயசரவணகுமார் (தனியார் பள்ளிகள்), திருமதி ஜோதிலட்சுமி (தொடக்க நிலை) மற்றும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Summer Celebration Programme for School Students District Collector Asha Ajith inaugurated the event